தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 20 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அல்லாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுவர். எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த சேர்க்கைக்கு, நன்கொடையோ, கல்வி கட்டணமோ செலுத்த தேவையில்லை. இந்த ஒதுக்கீட்டில், பள்ளிகளில் சேரும் மாணவர்கள், 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.தமிழகத்தில், இச்சட்டப்படி, மாணவர்களை சேர்க்க, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான, இலவச மாணவர் சேர்க்கை பெற, ஏப்., 20 முதல், மே, 18 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். தமிழக பள்ளிக் கல்வி துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை பெறலாம். இதற்காக, அந்தந்த பள்ளிகள், விண்ணப்பங்களை பெற்று, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.வட்டார வள மையங்கள், உதவி தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றிலும், பெற்றோர், தங்கள் விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' வாயிலாக, பதிவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக