தனிநபர் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியான வருகிற 31-ஆம் தேதியைத் தள்ளிப்போட வேண்டும் என்று பட்டயக் கணக்காளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்குப் பரவலாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் தனிநபர் வருமான வரிக்கான படிவங்கள் இணையத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்டாக வேண்டும் என்கிற நிலையில் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.
2015-16 நிதியாண்டு வரை, அந்தந்த ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான படிவங்களை இணையம் மூலம் சமர்ப்பிக்க இரண்டாண்டு அவகாசம் வருமான வரித் துறையால் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் இந்த அவகாசம் ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டிருப்பதால், 2015-16, 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்வதில் அனைத்து பட்டயக் கணக்காளர்களும் பரபரப்பாகச் செயல்படுகிறார்கள்.
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, தாக்கல் செய்யும் நபரின் சம்பளத்திலிருந்தோ, இதர வருமானத்திலிருந்தோ, ஏற்கெனவே பிடித்தம் செய்யப்பட்டு வருமான வரித் துறைக்கு செலுத்திவிட்ட 'டிடிஎஸ்' எனப்படும் மூல வரிப்பிடித்தம் குறித்த தகவல்களை இணைத்தாக வேண்டும்.
இதை 'ட்ரேசஸ்' எனப்படும் வருமான வரித் துறையின் இணையதளத்திலிருந்து சம்பந்தப்பட்ட நபரின் 'பான்' எண்ணைப் பதிவு செய்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் கடந்த புதன்கிழமை (மார்ச் 28) முதல் இந்த 'ட்ரேசஸ்' தொடர்பான இணையதளம் சரியாக செயல்படாத நிலைமை காணப்படுகிறது. அத்தனை பட்டயக் கணக்காளர்களும் கடைசி நேர வரித்தாக்கல் செய்வதற்காக இந்த இணையத்தை அணுகுவதால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை இது.
இந்த அளவுக்குத் தேவை இருப்பதை உணர்ந்து வருமான வரித் துறை தனது கட்டமைப்பு வசதிகளையும், இணையதளத்தின் செயல்பாட்டையும் தரமுயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.
மேலும், 29-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியும், 30-ஆம் தேதி புனித வெள்ளியும் வங்கிகளுக்கு விடுமுறை விட்டிருப்பதால், வங்கியிலிருந்து பெற வேண்டிய தகவல்களைப் பெறவும் முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடைசித் தேதியான 31-ஆம் தேதி, எல்லா வாடிக்கையாளர்களின் வருமான வரிக் கணக்குப் படிவங்களையும், முழுமையான தகவல்களுடன் பதிவேற்ற முடியாத சிக்கலில் பட்டயக் கணக்காளர்கள் தவிக்கிறார்கள்.
குறைந்தது இரண்டு வாரங்களாவது, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் தேதியைத் தள்ளி வைத்தால் மட்டுமே அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளையும் பதிவேற்றம் செய்து தாக்கல் செய்ய முடியும் என்கிறார்கள் பட்டயக் கணக்காளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக