லேபிள்கள்

29.4.18

மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டாவது வழங்கப்படுமா?

அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகியும் நடை முறைக்கு வராத, பள்ளி மாணவர்களுக்கான, 'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வருமா என, எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரங்களில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், திட்டங்களை அமல்படுத்துவதும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் சிக்கலாக உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு விபரங்களை தெரிந்து கொள்ள, ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு முடிவு செய்தது.இந்த திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதார் எண்கள், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர் விபரம், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு, 'எமிஸ்' என்ற, கல்வி இணையதள மேலாண்மை எண், உருவாக்கப்பட்டது.இந்த எண், ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 முடிக்கும் வரை, மாறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண் அடிப்படையில், மாணவர்களுக்கு மின்னணு, 'சிப்' பொருத்தப்பட்ட, ஸ்மார்ட் அட்டை வழங்க முடிவானது.திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவில்லை. இந்த அட்டை வழங்கப்பட்டால், பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் தர மறுத்தாலும், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள், மற்றொரு பள்ளியில் சேர முடியும்.போலி மாணவர்கள் பெயர்களை, பள்ளிகளின் பதிவேட்டில் சேர்க்க முடியாது. அரசின் திட்டங்களை, போலி மாணவர்களின் பெயரில், யாரும் அபகரிக்க முடியாது. அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளும் குறையும். இதுபோன்ற பல நன்மைகள் உள்ளன. 'எனவே, இனியும் தாமதம் செய்யாமல், ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக