லேபிள்கள்

4.5.18

பிளஸ் 1 புத்தகம் லீக்; 'கெய்டு' விற்பனை போலீசில் புகார் தர அதிகாரிகள் முடிவு

தமிழக அரசு வெளியிடும் முன், பிளஸ் 1 புதிய பாட புத்தகம், கள்ள சந்தையில் வெளியானது குறித்து, போலீசில் புகார் அளிக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாராகியுள்ளது.இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், மிக தரமாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் தயார் செய்யப்பட்டுள்ளன.
புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்களை, அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வரை, கட்டுகளை பிரிக்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 1 பாட புத்தகம், 10 நாட்களுக்கு முன், 'வாட்ஸ் ஆப்'பில், பி.டி.எப்., வடிவில், லீக் ஆனது. 
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் புத்தகங்கள், பி.டி.எப்., ஆக, பள்ளிகளுக்கு கிடைத்து, பல பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன.புதிய பாடத்திட்டத்தில் புத்தகங்களை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட உள்ளார்.
அதற்கு முன், பிளஸ் 1 பாட புத்தகங்களின், 'கெய்டு'கள், கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில், கெய்டுகள் விற்கப்படுகின்றன.இதுகுறித்து, கெய்டுகளை வெளியிட்ட நிறுவனத்தின், வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, 'தற்போது பிளஸ் 1 கெய்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது; ஒரு வாரத்திற்கு பின், விற்கப்படும்' என்றனர்.
கள்ள சந்தையில் பாட புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பல்வேறு தரப்பிலும் புகார்கள் வந்துள்ளன. கெய்டுகள் வெளியிட்டவர்கள் மற்றும் கள்ள சந்தையில் பாட புத்தகத்தை விற்பனை செய்தவர்கள் மீது, போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாட புத்தகத்தை, லீக் செய்தவர்கள் யார் என்றும், விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக