மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க வேண்டிய மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் வர வேண்டிய நேரம், தேர்வு எழுதும் முறைகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், கூறப்பட்டு உள்ளதாவது:
• காலை, 9:30 மணிக்கு பின், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. 9:30க்கு, தேர்வுக்கான அறிவுரை வழங்குதல், ஹால் டிக்கெட் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் துவங்கும். 10:00 மணிக்கு தேர்வை எழுத துவங்க வேண்டும்; பகல் 1:00க்கு தேர்வு முடியும் தேர்வு மையத்தின் நேரம் என்பது, சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கடிகார நேரத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும்
• தேர்வு மையம், காலை, 7:00 மணிக்கே திறக்கப்படும். தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை நகல் எடுத்து, அதை தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள், தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அளித்த புகைப்படத்தை பின்பற்றி, அதேபோன்ற இரண்டு புகைப்படங்களை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்
• ஓ.எம்.ஆர்., எனப்படும், கணினி திருத்த விடைத்தாளில், சரியான விடையை எழுத, கறுப்பு அல்லது நீல நிற மை பேனா, தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். தேர்வர்கள் யாரும், பேனா எடுத்து செல்ல அனுமதியில்லை
• தேர்வறையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, தேர்வர்கள் அமர வேண்டும். வேறு இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினால், அந்த தேர்வரின் விடைத்தாள் ரத்து செய்யப்படும்
கடைபிடிக்க வேண்டியவை:
• தேர்வு துவங்க உள்ள, 15 நிமிடங்களுக்கு முன், மூடி முத்திரையிட்ட உறையில், தேர்வுக்கான விடை எழுத வேண்டிய தாள் வழங்கப்படும். அதை வாங்கியவுடன், கவரின் மேல் பகுதியில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, தேர்வு மையத்தில், பந்து முனை பால் பாயின்ட் பேனா வழங்கப்படும். அதேநேரம், கண்காணிப்பாளர் கூறும் வரை, கவரை திறக்க கூடாது • தேர்வு துவங்குவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன், கவரை பிரிக்க, கண்காணிப்பாளர் அறிவுறுத்துவார். விடை எழுத வேண்டிய தாளில், இரண்டாம் பக்கத்தில், குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தேர்வருக்கு வழங்கப்பட்ட உறையில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மாறியிருந்தால், கண்காணிப்பாளிரிடம் காட்டி, இரண்டு எண்ணும் சரியாக உள்ளதை பெற்று கொள்ள வேண்டும்
• கண்காணிப்பாளர் சொன்ன பிறகே, தேர்வு எழுத துவங்க வேண்டும்; அவர் அறிவுறுத்தியதும், தேர்வு எழுதுவதை முடித்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில், கண்காணிப்பாளர் கையெழுத்திட்டிருப்பதை, தேர்வு முடிந்ததும் உறுதி செய்ய வேண்டும்
• விடைத்தாளின் ஒரு பக்கத்தில், பதிவு எண், தேர்வரின் பெயர், தந்தை பெயர், தேர்வு மையத்தின் எண், தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விபரங்களை, அதற்காக குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.
தேர்வரின் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், பதிவு எண், தேர்வு மைய எண், விடைத்தாள் உறை எண், வினாத்தாள் குறியீடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு தகவல் தொகுப்பில் கூறப்பட்டு உள்ளது.
'அடுத்தாண்டு சிக்கல் இருக்காது'
''தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக, அடுத்த ஆண்டில், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை இருக்காது,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 147 பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தினோம்; 95 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இன்னும், 48 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட வேண்டும்.
'நீட்' தேர்வு என்பது, அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் கடைசி வரை, நீட் தேர்வுக்கு உடன்படவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. சில மாவட்ட மாணவர்கள், இம்முறை, நீட் தேர்வு எழுத, வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, இந்த பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மைனஸ் மார்க்: கவனம் தேவை
இந்த தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து, கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில், 180 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையை தேர்வு செய்தால், ஒவ்வொரு தவறான விடைக்கும், மொத்த மதிப்பெண்ணில், தலா ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
இரட்டை விடைக்கு, 'கட்' :
ஒவ்வொரு வினா எண்ணிற்கு முன், நான்கு வட்டங்கள் இருக்கும். அதில், அந்த வினாவுக்கு சரியான விடையை, அதற்கான வட்டத்தில், 'மார்க்' செய்ய வேண்டும். விடையை மார்க் செய்யும் முன், ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தவறான விடையை தேர்வு செய்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது. ஒரு கேள்விக்கு, ஒரு விடை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். இரண்டு விடைகளை தேர்வு செய்திருந்தால், அதற்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது. ஒயிட்னர், அழிப்பான் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினாலும், அதை கணினி வழி திருத்தும் கருவி கண்டறிந்து, அந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்காது. சில கணக்கு மற்றும் சூத்திரங்கள் அடங்கிய கேள்விக்கு, 'ரப் ஒர்க்' தேவைப்பட்டால், விடைத்தாளின் இறுதியில், அதற்காக வழங்கப்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
எத்தனை மொழிகளில் தேர்வு?
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, அனைத்து நகரங்களிலும் இடம் ஒதுக்கப்படும். மாநில மொழிகளாக, உருது, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, தமிழ் மொழிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, அந்தந்த மாநில தேர்வு மையங்களிலேயே இடம் ஒதுக்கப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வெளிமாநிலங்களில், இடம் ஒதுக்கப்பட்டுள்ள தால், அவர்களுக்கு, வேறு மாநிலங்களில், தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா என்பது, தேர்வு நாளில் தான் தெரிய வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக