லேபிள்கள்

1.4.18

வருமான வரி தாக்கல்: ஆணையர்கள் எச்சரிக்கை

 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, வருமான வரித்துறை ஆணையர்கள் கூறினர்.கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான,
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் நிறைவடைந்தது.வரி தாக்கல் செய்ய, காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், சென்னை, வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட, இணையதள சிறப்பு கவுன்டர்களில், ஏராளமானோர் வரி கணக்கு தாக்கல் செய்தனர். இணையதளம் வாயிலாக, வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, நேற்று இரவு, 12:00 மணி வரை அவகாசம் கிடைத்தது. 
இது குறித்து, வருமான வரித்துறை ஆணையர்கள், சங்கரன், பழனிவேல்ராஜன் கூறியதாவது: இரண்டு நிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இனிமேல் தாக்கல் செய்ய முடியாது. மேலும், அவர்கள் மீது, வருமான வரி சட்டப்படி, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.வருமான வரி, அதற்கான வட்டி, அபராதம் வசூலித்தல் போன்றவையும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், கடந்த நிதியாண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட, 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய், வரி வருவாய் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகரிக்க வாய்ப்பு : வருமான வரித்துறை நடவடிக்கையால், 2016 - 17ம் ஆண்டுக்கான, வருமான வரி செலுத்துதல் மற்றும் கணக்கு தாக்கல் செய்ததில், புதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த, 2015 - 16, 2016 - 17ம் நிதியாண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல், நேற்றுடன் முடிந்தது. கூடுதலாக, வரி வசூலிக்க, வருமான வரித்துறை, புதிய வழிமுறைகளை கையாண்டுள்ளது. இதன் வாயிலாக, புதிதாக கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி வசூலில், ஆண்டுதோறும், பல உத்திகள் கடைபிடிக்கப்படும். அவை, சட்டத்திற்கு உட்பட்டு மாற்றப்படும். அதன்படி, நடப்பு ஆண்டில், வரி வருவாயை அதிகரிக்க, 10க்கும் மேற்பட்ட புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. இதன் வாயிலாக, மாத சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களை தவிர்த்து, கூலி வேலை செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்ற பிரிவினருக்கும், வருமான வரி செலுத்தும்படி கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, அவர்கள் தெரிவித்த பதிலில், குறிப்பிட்ட வருவாய் தவிர, இதர வருவாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கண்காணிக்க, தனி ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு கீழ், பல அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அதனால், இந்த ஆண்டு, புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அவர் கூறினார்.
எதிர்பார்ப்பு : கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை, சில தினங்களுக்கு முன்னரே, நான்கு லட்சத்தை எட்டியது; தற்போது, ஆறு லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு, முதல் முறையாக, வருமான வரித்துறை தலைமை ஆணையரின் கையெழுத்திட்ட, 20 லட்சம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதும்; வரித் தாக்கல் அவகாசம் குறைக்கப்பட்டதும், முக்கிய காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக