லேபிள்கள்

23.5.13

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்


           அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.
              பள்ளி கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற வழிவகை உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர், தகுதிக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என, பல நிலைகளில் பதவி உயர்வு பெறுகின்றனர்.

         இதர ஆசிரியர்களும், இதேபோல், ஒவ்வொரு படியாக, பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வும் இன்றி, பல ஆண்டுகளாக பணியாற்றும் நிலை உள்ளது.

        நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உய ர்த்தப்படுவதால், அந்த பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோவதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

         நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயரும்போது, அந்த பள்ளி, பள்ளி கல்வித்துறையின் கீழ் வந்துவிடுகிறது. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், தரம் உயர்த்தப்பட்ட, அதே பள்ளியில், பணி புரியலாம்.

           ஆனால், சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளி, எந்த தேதியில், தரம் உயர்த்தப்பட்டதோ, அந்த தேதியில் இருந்து தான், அந்த பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பு, புதிதாக கணக்கிடப்படும். இதனால், பழைய பணிமூப்பு, கணக்கில் வராது. இதனால், பதவி உயர்வு பெற வழியே இல்லை என, கூறப்படுகிறது.

          தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப் பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: டி.ஆர்.பி., மூலம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தான், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டி.ஆர்.பி., வழங்கிய, "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

         அனைத்து ஆசிரியர்களும், சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாக, தற்போது கலந்தாய்வு நடக்கிறது. இதனை, நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பேட்ரிக் கூறினார்.

             தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், அனைத்து வகை பள்ளிகளும், சம எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

              அந்த அளவிற்கு, ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது இல்லை. இதனால், நடுநிலைப் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள பதவி உயர்வு விவகாரத்தை, தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

             இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "துறை மாறும்போது, பணிமூப்பு புதிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. டி.ஆர்.பி., "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் எனில், அரசு தான் உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக