லேபிள்கள்

5.11.13

2-ம் வகுப்பு மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: தனியார் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேரில் விசாரணை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பரிந்துரை

சேலத்தில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தால் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

2-ம் வகுப்பு சிறுவன்

சேலம் சூரமங்கலம் கிழக்கு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்-லத்திகா தம்பதி. இவர்களின் மகன் சாம்சுந்தர்(வயது8). இவன் சேலம் பழைய சூரமங்கலத்தில் உள்ள ‘ஸ்கை கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல்’ என்ற சி.பி.எஸ்.இ. பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 31-ந்தேதி பள்ளி உணவு இடைவேளையின்போது சக பள்ளி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் சாம்சுந்தரும் இன்னொரு மாணவனும் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டனர். அப்போது மாணவர் சாம்சுந்தரை, பள்ளியை சேர்ந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோர் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனின் வலது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு அதன் தழும்பு தெரிந்தது. காயத்திற்கு மருந்திடுவதற்காக கடந்த 1-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவன் சாம்சுந்தர் அனுமதிக்கப்பட்டான்.

போலீசில் புகார்

இது குறித்து சூரமங்கலம் போலீசிலும் மாணவனின் தந்தை கிருஷ்ணகுமார் புகார் செய்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பள்ளியை நிர்வகித்து வரும் பெண் நிர்வாகி பிரியா, சேலத்தில் கூடுதல் சூப்பிரண்டாக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று வேலூர் சென்ற போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனின் மனைவி ஆவார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளியில் சென்று விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் குழு விசாரணை

இந்த நிலையில் மாணவர் சாம்சுந்தர் தாக்கப்பட்ட ஸ்கை கிட்ஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு, நேற்று சேலம் மாவட்ட நன்னடத்தை அலுவலர் தேவகி தலைமையிலான 4 பேர் குழுவினர், மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சண்முகவேலு மற்றும் குழந்தைகள் நலக்குழும தலைவர் சேவியர் ஆகியோர் விசாரணை நடத்துவதற்காக சென்றனர்.

அங்கு பள்ளி நிர்வாகி, அவர்களை உள்ளே விட மறுத்தார். நீண்டநேரத்திற்கு பிறகு தாங்கள் குழந்தைகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் என்ற பின்னரே உள்ளே அனுமதித்தனர். மாணவன் சாம்சுந்தர் படித்து வரும் 2-ம் வகுப்பில் மொத்தம் 11 மாணவர்களே படித்து வருகிறார்கள்.
அதிலும் நேற்று 6 மாணவர்கள் மழை காரணமாக பள்ளிக்கு வரவில்லை. 5 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களிடம் மாவட்ட நன்னடத்தை அலுவலர் தேவகி விசாரணை நடத்தினார்.

அப்போது சாம்சுந்தருடன் தகராறில் ஈடுபட்ட மாணவனிடம் அக்குழுவினர் விசாரிக்கையில், தன்னை ஒரு அடி மட்டும் அடித்ததாகவும், சாம்சுந்தரைத்தான் 2 பேர் பிரம்பால் அடித்ததாகவும் தெரிவித்தான்.

பள்ளி பட்டியலில் இல்லை

அந்த மாணவன் சொன்ன ராஜேஷ், தினேஷ் ஆகியோர் பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்களா? என பள்ளியின் பதிவேட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆனால், பதிவேட்டில் அவர்கள் இருவரது பெயரும் இல்லை. எனவே, அதிகாரிகள் விசாரணையில் மாணவன் சாம்சுந்தர் தாக்கப்பட்ட உண்மை என்றும், அவனை அடித்ததாக கூறப்படும் 2 நபர்கள் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் வெளிநபர்களா? அல்லது போலீஸ்காரர்களா? என தெரியவில்லை என்று அக்குழுவினர் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை

இது குறித்து மாவட்ட நன்னடத்தை அலுவலர் தேவகி கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியில் நேற்று விசாரணைக்கு சென்றபோது முதலில் எங்களை உள்ளே விடவே பள்ளி நிர்வாகி அனுமதிக்கவில்லை. போராடித்தான் செல்ல வேண்டியதிருந்தது. எங்களது விசாரணையில் மாணவன் தாக்கப்பட்டது உண்மை என தெரியவந்துள்ளது.

ஆனால், அவனை தாக்கியதாக கூறப்படும் நபர்கள் பள்ளியில் வேலையில் இல்லை. ஏற்கனவே, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையே சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகார் மனுவை ஏற்று உடனடியாக வழக்குப்பதிவு செய்வதற்கு சொல்லி இருக்கிறோம். அப்படியும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் முறைப்படி குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக