அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி
நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின்
எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி
நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக வேலைகளை
நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும்.
வாரிசுகளுக்குத் தரப்பட்ட தாற்காலிகப் பணியை
வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து
வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள்
பெறப்பட்டன. வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச்
சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு
படிவத்தையும் சேர்த்துப் பெற்று அரசு பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பிவைப்பார்.
இவ்வாறு பலவகையான சான்றிதழ்களைத் திரட்டித் தரவேண்டியுள்ளதால் வாரிசுகளின் பணி
நிரந்தரம் காலதாமதமாகிறது. இதைத் தவிர்க்கும்வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு
பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச்
சான்றிதழ், கல்வி தகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்களை
அனுப்பினால் போதும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சான்றிதழ்களுடன் வாரிசு பற்றிய அடிப்படை
விவரங்களைத் தெரிவிப்பதற்கான 18 பிரிவுகளைக் கொண்ட ஒரு படிவத்தையும் அரசுத்
துறைகளின் தலைவரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
பணிவரன்முறை எளிதாகும்: சான்றிதழ்களின்
எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக கருணை அடிப்படையிலான பணிவரன்முறைகள் எளிதாக நடைபெறும்
என பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக