ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம்
செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகளை முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லையோ என்னவோ, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடு படுகிறது.
'முதுகலை தேர்வில், கேள்வி தவறு; சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக்கான வழக்குகள் எப்போது முடியும்; எப்போது இறுதி பட்டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை உள்ளது. இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது. தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகளையும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்களையும், உடனடியாக பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன் - லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக