'சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி
நியமனம் செய்யப்படுவர்' என, அறிவித்துள்ள தமிழக அரசு, வெறும், 5,000 ரூபாய் சம்பளத்தில், இரு ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது ஏன்; சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?' என, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கடந்த, 2012, மார்ச்சில், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில், நியமனம் செய்யப்பட்டனர். மாதத்தில், 12 நாள் வேலைக்கு, 5,000 ரூபாய் சம்பளம். 16 ஆயிரம் பேரில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், திருமணமாகி, குடும்பவாசிகளாக உள்ளனர். 'சம்பளம் உயரும்; பணி நிரந்தரம் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில், 16 ஆயிரம் பேரும், வேலையில் சேர்ந்தனர். ஆனால், சம்பளமும் உயரவில்லை; பணி நிரந்தரம் கிடைப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை. இதனால், சொற்ப சம்பளத்தில், குடும்பத்தை ஓட்ட முடியாமல், பலரும் திணறி வருகின்றனர். இதற்கிடையே, காவல்துறைக்கு, பல வகைகளில் உதவும் வகையில், சிறப்பு காவல் இளைஞர் படையை உருவாக்கி, 10 ஆயிரம் பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மாதம், 7,500 ரூபாய் சம்பளம். 'இவர்கள், ஒரு ஆண்டு பணி முடித்தபின், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சிறப்பு தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்; அதில், தகுதி வாய்ந்தவர்கள், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோன்ற சிறப்பு தேர்வை, தங்களுக்கும் நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க பொதுச் செயலர், கோவிந்தராசு கூறியதாவது: சிறப்பு காவல் இளைஞர் படையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, ஒரு நியாயம்; எங்களுக்கு ஒரு நியாயமா. மிகவும் வேதனையாக உள்ளது. குறைந்த சம்பளத்தில், இரு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறோம். பணிகாலத்தில், ஏழு ஆசிரியர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, எந்த பண பலனையும், அரசு வழங்கவில்லை. இளைஞர் காவல் இளைஞர் படையினருக்கு நடத்த திட்டமிட்டுள்ள சிறப்பு தேர்வைப்போல், எங்களுக்கும், ஒரு சிறப்பு தேர்வை நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக