லேபிள்கள்

25.3.14

10ம் வகுப்பு தேர்வு: முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் பத்தாம்
வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. 

அதனால் மாணவர்கள் 9.30 மணிக்கு விடை எழுதத் தொடங்கி 12 மணிக்கு தேர்வை முடிக்க வேண்டும். கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க 20 கேள்வித்தாள் கொண்ட சீலிடப்பட்ட உறைகள் தேர்வு அறைகளுக்கே எடுத்து வரப்பட்டு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று உறைகள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்படும். தேர்வு மையங்கள் செயல்படும் பள்ளிகளில் அந்த பள்ளியை சேர்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் வளாகத்திலேயே இருக்க கூடாது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 5 லட்சத்து 30  ஆயிரத்து 462 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவியர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பள்ளி மாணவர்களை  தவிர 286 தேர்வு மையங்களில் 74 ஆயிரத்து 647 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள். அவர்களில் 55 ஆயிரத்து 454 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 193 பேர் மாணவியர். டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்காக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்டோர் சொல்வதை எழுதுவதற்காக ஒருவர் நியமிக்கப்படுவார்.  மொழிப்பாடத்தில் ஒன்று தவிர்க்கப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெனரேட்டர் வசதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனை செய்யவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துண்டுத்தாள் வைத்திருத்தல், அதை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத் தாளை மாற்றிக் கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 பேருக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளியில் தேர்வு மையம் ரத்து செய்யப்படும். பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படும்.

கலெக்டர் திடீர் ஆய்வு

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் அவர்கள் இணைந்து செயல்படுவார்கள். அதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இடம் பெறுகின்றனர். அவர்கள் தேர்வு மையங்களை திடீரென பார்வையிடுவார்கள். இது தவிர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வு மையங்களை பார்வையிட கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர். அந்த குழுவும் திடீர் ஆய்வு செய்யும். 

சிறைக் கைதிகள்

கடந்த சில ஆண்டுகளாக சிறைகளில்  தேர்வு மையம் அமைக்கப்பட்டு அங்கேயே தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது சென்னை புழல் சிறையில் 45 கைதிகளும், திருச்சி சிறையில் 74 கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னையில் 207 தேர்வு மையம்


பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் 588 பள்ளிகளில் இருந்து மொத்தம் 56 ஆயிரத்து 556 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அவர்களில் 27 ஆயிரத்து 943 பேர் மாணவர்கள். 28 ஆயிரத்து 613 பேர் மாணவியர்.  அவர்களுக்காக சென்னையில் 207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 279 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 509 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 9 ஆயிரத்து 309 பேர் மாணவர்கள். 9 ஆயிரத்து 200 பேர் மாணவியர். இவர்களுக்காக புதுச்சேரியில் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக