கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, நகராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சிக்கு உட்பட்ட 2,883 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது.
மேலும், செங்கல் சூளை, கட்டப் பணி, சாலைப் பணி, உணவு விடுதி மற்றும் இதரப் பணிகள் நடக்கும் இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 220 பேரும், சிறப்பாசிரியர்கள் 75 பேரும் ஈடுபடுகின்றனர். பள்ளிச் செல்லா, பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவிகள் விவரங்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத் துறை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் 6 வயது முதல், 14 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கப்படும். குறுகிய காலத்தில் பள்ளியை விட்டு இடைநின்ற 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால இணைப்பு மையம் மூலமும், மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளியை விட்டு இடை நின்றவர்களுக்கு நீண்ட கால இணைப்பு மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும்.
புலம் பெயர்ந்த, தெருவோரக் குழந்தைகள், நாடோடிக் குழந்தைகள், நரிக்குறவர் இன குழந்தைகள் ஆகியோருக்கு உண்டு உறைவிட மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும். கண்டறியப்படும் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெறுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக