பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த பொதுத்தேர்வின் போது, அறிவிக்கப்படாத 15 முதல் 18 மணி நேர மின்வெட்டால் மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இக்கொந்தளிப்பு அனைத்து துறைகளிலும் எதிரொலித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு, மின்வெட்டும் ஒரு காரணமாக இருந்தது. கடந்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களை மின்வெட்டு பாடாய்படுத்தியது.கடந்த ஒரு வார காலமாக, கோவை மாநகரில் பகலில் நான்கு மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமும், புறநகர் பகுதிகளில் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது.தற்போது, கோவையில் நிலவும் வெயிலின் தாக்கத்தில் மின்தடை இல்லாத சமயத்தில் வீடுகளில் இருப்பதே மிகவும் சிரமமாக உணரும் பட்சத்தில், பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களில் பாடு சொல்லத்தேவையில்லை. பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்ற நிலையில், இம்மாணவர்களுக்கு பெரிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை .ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (26ம் தேதி) பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இரவும், பகலும் கண் விழித்து தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் மத்தியில், மின்தடை பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏற்படும் கவனச்சிதறலால் மாணவர்களின் தேர்வுகள் பாதிக்குமோ என்று பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மாணவி ஒருவர் கூறுகையில், ''மின்தடை ஏற்படும் நேரத்தில், படிக்க முடியாமல் சிரமமாக உள்ளது. வீட்டிற்குள் உட்காரவே முடியவில்லை. எந்த நேரத்தில், மின்தடை ஏற்படும் என்றே தெரியவில்லை. என்னதான் படித்தாலும், தேர்வுக்கு முன் அனைத்தையும் திருப்பிபார்க்கவேண்டும். மின்தடையால் ஏற்படும் டென்ஷனால், படித்ததும் மறந்துவிடுமோ என்று தோன்றுகிறது,'' என்றார். பெற்றோர்கள் கூறுகையில், 'அதிக வெப்பத்தின் காரணமாக, மின்தடை ஏற்படும் நேரத்தில் படிக்க முடியாமல், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இரவில், சரியான உறக்கம் இல்லை என்றால், எப்படி படிக்க முடியும்? கோடைக்காலத்தின் போது, மின்பயன்பாடு அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு தகுந்தபடி புதிய திட்டங்களை வகுத்து மின்உற்பத்தி செய்யாமல், காரணங்கள் சொல்வதும், பிற கட்சியினர் மீது பழி போடுவதும் வாடிக்கையாகிவிட்டது' என்றனர். கோவை மாவட்ட மின்வாரிய தலைமைபொறியாளர் தங்கவேலுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, '' மின் தடை குறித்து, பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க எங்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது தகவல் ஏதும் தெரிவிக்க இயலாது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக