அரசு பணி தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், வரும் ஜூன் 14ல் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கான தேர்வுகள் நடக்கவுள்ளது. இதன்மூலம், 2342 பணியிடங்கள் அரசு பணி தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வில், பங்கேற்பவர்கள் வரும் 15ம் தேதிக்கு முன்பு 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இதில், பார்வையற்றோர், காதுகேளாதோர் முற்றிலும் இத்தேர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 2006ல் வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 50 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வில் கட்டாயம் பங்கேற்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். தற்போது, 'ஆன்-லைன்' முறையில் விண்ணப்பிக்கும் போது, கை அல்லது கால் இயக்கத்தில் குறை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் 'ஆப்சன்கள்' கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பார்வை திறன் கொண்டவர்கள், 40 சதவீதம் காதுகேளாதோர் போன்றவர்கள் விண்ணப்பிக்க எவ்வித 'ஆப்சன்களும்' வழங்கப்படவில்லை. இதனால், விண்ணப்பிக்க இயலாத சூழலில் செய்வதறியாது பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.
யூடைஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் சூரிய நாகப்பன் கூறுகையில், '' குரூப் 1 தேர்வில், பார்வையில்லாத ஒரு பெண் கடந்த முறை தேர்ச்சி பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பை குறித்து ஆராயாமல், ஒரே ஒரு 'ஆப்சன்' கொடுத்திருப்பது நியாயமற்றது. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடரப்படும். அரசு தேர்வாணையம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக