கிராமப்புற பெற்றோரிடமும் பெருகிய ஆங்கில மோகத்தின் விளைவு கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் குக்கிராமங்களிலும் பிறப்பதற்கு வழி வகுத்தது. நுனி நாவில் ஆங்கிலம் பேச முடியும், அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பன போன்ற மோகமே மெட்ரிக் பள்ளிகள் வளர்வதற்கு வசதியாக அமைந்தன. இதை காரணம் காட்டி பல பள்ளிகளிலும் இஷ்டத்திற்கும் கட்டண கொள்ளைகள் அரங்கேறின. சாதாரண எல்கேஜி படிப்புக்கு கூட பிரபல பள்ளிகளில் இடம் பிடிப்பதற்கு இன்டர்வியூவில் பங்கேற்கவேண்டிய அவலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல...பெற்றோருக்கும் ஏற்பட்டது. இதன் விளைவு தமிழக அரசால் கிராமப்புறங்களில் நடத்தப்பட்டு வந்த அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மெல்ல, மெல்ல மூடு விழா காணத் தொடங்கியது.
பணம் பறிக்கும் வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டனவே தவிர பெரிய அளவில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தரமான கல்வியை தரமுடியவில்லை.இதன் விளைவாக தமிழகத்தில் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என பல்வேறு பாடத்திட்டங்களையும் இணைத்து பொதுப்பாடத்திட்டம்(சமச்சீர் கல்விமுறை) கொண்டு வரும் நடவடிக்கை 2007ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக பிரபல கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைத்து ஆலோசனைகள் நடத்தி தேவையான மாற்றங்களுடன் சமச்சீர் கல்விமுறை கடந்த 2010ம் ஆண்டு 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் அமல்படுத்தப்பட்டது. கமிட்டி ஆலோசனையின் படி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமச்சீர் கல்வி முறையை அகற்றும் முயற்சி நடந்தபோது ஒட்டு மொத்த மக்களும் கொதித்தெழுந்தனர். விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது.
சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பலன் கடந்தாண்டு எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் எதிரொலித்தது. மாநில அளவில் ராங்க் பெற்றவர்களில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளிலும் அதிகரித்தது. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது தான் காரணம் என ஒட்டு மொத்த கல்வியாளர்களும் ஒப்பு கொண்டனர் சத்தமில்லாமல் நடக்கும் சதி: சமச்சீர் கல்வி முறையால் உடனடியாக தங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற போதிலும்; அடுத்து வரும் ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக பலன் கிடைக்காது என்பதை ‘கல்வி தந்தைகள்‘ உணர்ந்தே உள்ளனர். இதற்கான மாற்று தேர்வு தான் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசின் பொது கல்வி முறை. ஏற்கனவே மெட்ரிக் கல்வி இயக்குநரகத்தில் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றும் முயற்சிகள் தமிழகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் மட்டும் கடந்த ஓராண்டில் 1200க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடமுறைக்கு மாறுதல் செய்ய தடையின்மை கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதில் 40 சதவீத பள்ளிகளுக்கு தடையின்மை சான்று கொடுக்கப்பட்டு அப்பள்ளிகள் சிபிஎஸ்இக்கு விண்ணப்பித்துள்ளன.
சில பள்ளி நிர்வாகங்கள், ஏற்கனவே இயங்கும் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ கல்வி முறைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன(புதிதாக துவங்கும் பள்ளிக்கு தடையின்மை சான்று தேவையில்லை). சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் ஒரே வளாகத்தில் சிபிஎஸ்இ, ஸ்டேட்போர்டு பள்ளிகள் செயல்படுவதை காண முடிகிறது. வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கியுள்ளன. ஏற்கனவே சமச்சீர் கல்வி முறையில் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோரை மூளைச்சலவை செய்து அதே வளாகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. சமச்சீர் கல்வி முறையில் தரம் இல்லை. 10ம் வகுப்பில் முப்பருவமுறை வருவதால் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியாது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால் மட்டுமே பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு எளிதில் செல்லமுடியும். ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஏற்ற கல்வி முறை சிபிஎஸ்இ பள்ளிகளில் தான் வழங்கப்படுகிறது போன்ற ஆசை வார்த்தைகளையும் அள்ளி விட்டு பெற்றோரை மயக்கி சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றுகின்றனர். மாற்றுவதன் பின்னணி என்ன?: தமிழகத்தில் தற்போது பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப அரசே கட்டணம் நிர்ணயித்து பட்டியல் வெளியிடுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலேயே அரசின் நேரடி கண்காணிப்பும் ஓரளவு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் பெற்றோர் எதிர்ப்பு, போராட்டங்கள் அரசின் கவனத்திற்கு செல்லும். இதனால் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் பொது தேர்வுகளில் மாநில, மாவட்ட சாதனையாளர்கள் உருவாக்கப்படவில்லை எனில் பள்ளியின் தரம் குறித்த சந்தேகங்கள் எழுந்து மாணவர் சேர்க்கை குறைகிறது.
கட்டணம் வசூலிப்பில் இதுபோன்ற தடைகள் ஏதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இல்லை. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை கூட ஆசிரியர்களாக நியமிக்கமுடியும். தற்போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25% ஒதுக்கீடு ஏழைகளுக்கு வழங்கவேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் போதிய கண்காணிப்பு கிடையாது.
ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் சமமான கல்வி வழங்கவேண்டும். தமிழகத்தின் பல உரிமை பிரச்னைகளுக்கு மத்திய அரசிடம் போராடும் தமிழக அரசு, சிபிஎஸ்இ பள்ளிகள் விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சிபிஎஸ்இ என்ற பெயரில் மீண்டும் பள்ளிகள் வணிக நிறுவனங்களாக உருவாவதை தடுக்க தமிழக பொதுக்கல்வி முறையை வலுவூட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும்.
கற்றல் திறனில் தமிழகத்துக்கு 18 வது இடம்
கற்றல் திறன் மேம்பாடு குறித்து என்.சி.ஆர்.டி. நடத்திய ஆய்வில் தமிழகம் 18 ஆவது இடத்தில் உள்ளது. கணிதம் மற்றும் அறிவியலில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் உள்ளனர். இது குறித்து கல்வியாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியில் தொடர் மதிப்பீட்டு முறை மத்திய பாடத்திட்ட அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. சமச்சீர் கல்விக்கும், சிபிஎஸ்இக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. மத்திய பாடத்திட்டத்தில் தற்பொழுது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், மொழிப்பாடத்தில் மேம்படுத்தப்பட்ட கற்றல் முறை, ஓப்பன் புக் சிஸ்டம் மூலம் தேர்வு எழுதுதல் என்பது போன்ற புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மனப்பாடம் மதிப்பெண் இரண்டையும் விட்டு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்தின் நோக் கம் மாணவர்களை தேசிய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளுக்கு தகுதிப்படுத்துவதும், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு தயார் படுத்துவதும் ஆகும். மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் தானாகவே தேடிப் படிக்கும் முறை இதில் உள்ளது. தற்போது சமச்சீர் கல்வி முறையிலும் படிப்படியாக இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டு இயல்பாக படிக்கும் ஆர்வம் தூண்டப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக