லேபிள்கள்

24.3.14

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு உத்தரவு முற்றிலும் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழக அரசு, 1995ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை வெளியிட்டது. தொடர்ந்து, 2010ம் ஆண்டு அனைத்து அரசு உதவி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத கட்டாயம் இடஒதுக்கீடு வழங்க உத்தர

விட்டது.கடந்த நவ., 8ம் தேதி, நீதிபதி சதாசிவம் தலைமையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளும் அரசு மேற்கொள்வதற்கு முன்வரவில்லை என்ற மாற்றுத்திறனாளி அமைப்பு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பொறுத்தவரையில், 5,053 தொடக்கப் பள்ளிகள், 1,556 நடுநிலைப்பள்ளிகள், 633 உயர் நிலைப் பள்ளிகள், 1,165 மேல்நிலைப் பள்ளிகள், 42 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 139 கலை அறிவியல் கல்லுாரிகள், 14 கல்வியியல் கல்லுாரிகள், மூன்று பொறியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.ஆனால், இக்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீட்டு உத்தரவை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன. இதை கண்காணிப்பதற்கும், புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகள் இல்லை என்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 'யூடைஸ்' அமைப்பின் மாவட்ட தலைவர் சூரிய நாகப்பன் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துறையில், 20 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், மூன்று சதவீத இடஒதுக்கீடு என்று கணக்கிட்டால், 60 ஆயிரம் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரியவேண்டும்.ஆனால், வெறும் 7000 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசாணையை அரசே மதிக்கவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. சட்டசபையிலும், பார்லிமென்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுக்க பிரதிநிதிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக அமைக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், வெறும் 5000 பேர் மட்டுமே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மாநில அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாணையை உரிய முறையில் செயல்படுத்தினால், பதிவு செய்த அனைவருக்கும் ஒரே நாளில் பணி வழங்க முடியும். அரசின் அலட்சியமே இதற்கு காரணம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக