லேபிள்கள்

28.3.14

10 வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்


நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, 'பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நுால் எது' என்று கேட்டு, அதற்கு, 'ஆப்ஷன்' விடைகளாக, 'பகவத் கீதை, நன்னுால், பைபிள்' ஆகியவை தரப்பட்டன. பாடத் திட்டத்தின்படி, 'பைபிள்' என்பது சரியான விடை. இந்நிலையில், இந்த கேள்வியும், விடைகளும் சர்ச்சைக்குரியவை என, தெரிவித்து, இந்து முன்னணி, சென்னை மாநகர பொதுச் செயலர், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம், புகார் தெரிவித்தனர். மதத்திணிப்பு? தேர்வுத்துறை இணை இயக்குனர், ராமராஜுடம், அவர்கள் அளித்த புகார் மனு:
பள்ளி பாடத் திட்டங்களில், தி.மு.க., கொள்கை, நாத்திக கருத்துகள், மத கருத்துகள், வலிந்து திணிக்கப்படுகின்றன. பைபிள் பற்றி மாணவர்கள் மத்தியில், தாக்கத்தை ஏற்படுத்தவே, இந்த கேள்வியை கேட்டுள்ளதாக கருதுகிறோம்.

கேள்வியை அமைத்தவர், வேண்டும் என்றே, பகவத் கீதையை சேர்த்துள்ளார். மத திணிப்பை நோக்கமாகக் கொண்ட, இந்த கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில், இது போன்ற சர்ச்சைகள் ஏற்படாத அளவிற்கு, பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், ''கேள்வி, மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும், ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, கல்வித்துறை 
நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

'தவறில்லை'

தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது:
தமிழ் பாடப் புத்தகம், பக்கம், 182ல், 'காந்தி, ஒரு முறை இயேசுநாதரின், மலைசொற்பொழிவு பற்றிய நுாலை படித்தார். தீயவனை எதிர்க்காதே; 
அவனிடம் உள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு எனும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. பகவத் கீதையை படித்ததன் மூலம், மன உறுதியை பெற்றார்' என, வருகிறது.
இதன் அடிப்படையில், 185ம் பக்கத்தில் உள்ள மாதிரி வினாக்களில், இந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. பாடத் திட்டத்தின்படி, கேள்வியிலும், விடையிலும் தவறு இல்லை. எனவே, இதற்கு, கருணை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை. இந்த பிரச்னை குறித்து, தமிழக அரசுக்கு, அறிக்கை அனுப்புவோம்.

இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக