கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவர்கள் கூட சேராத அரசு பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, வேறு பள்ளியில் சேர சென்றபோது அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் யூனியன் சாமல்பட்டி அடுத்த எஸ்.மோட்டூரில் கடந்த 1999ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு வரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் 2010ம் ஆண்டு முதல் பாலமுருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தலைமை ஆசிரியர் சரிவர மாணவர்களுக்கு பாடங்களை சொல்லி தராததாலும், ஆசிரியர்களே இல்லாததாலும் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் ஏழு மாணவர்களே சேர்ந்தனர். இந்நிலையில் இந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. மோட்டூரை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளை அருகில் உள்ள வெள்ளையம்பதி அரசு துவக்கப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தனர்.
இதனால் பள்ளி துவங்கி 45 நாட்களான நிலையில் தலைமையாசிரியர் மட்டும் எப்போதாவது வந்து பள்ளியை திறந்து வைத்துவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிடுவார்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன் "காலைக்கதிர்" நாளிதழில் செய்தி வெளியானது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விசாரித்து பள்ளியை மூட உத்தரவிட்டாதால் அப்பள்ளி மூடப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த தலைமையாசிரியர் பாலமுருகன், மத்தூர் யூனியன் கொடமாண்டப்பட்டி அடுத்த முருக்கம்பட்டி அரசு துவக்க பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
முருக்கம்பட்டியில் உள்ள பள்ளியில் 11 மாணவர்கள் மட்டுமே உள்ளதால் அங்கு கண்மணி என்ற ஆசிரியை ஒருவர் மட்டும் பணியாற்றி வந்தார். அவரை ஒட்டப்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வி துறையினர் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், "முருக்கம்பட்டி அரசு பள்ளியில் கண்மணி ஆசிரியையாக வந்த பின்தான் மாணவர்கள் சேர்க்கை அதிகம் நடந்தது என்றும், பள்ளியை மூடிவிட்டு வரும் பாலமுருகன் தங்கள் பள்ளியில் பணியாற்றினால் மோட்டூரில் நடந்தது போலவே, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியையும் மூடவேண்டிய நிலை வரும்" எனக்கூறி முருக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளியில் பணியில் சேர சென்ற பாலமுருகனை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதேஸ் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாலமுருகனை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையடுத்து பகல் 12 மணி அளவில் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பினர். தலைமையாசிரியர் பாலமுருகன் பள்ளியில் சேர முடியாமல் திரும்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக