தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில், ஹிந்தியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்ற, பல்கலை மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தில், இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,” என, பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் கூறினார்.
பிரதமர் ஆர்வம்:வேலுார், சாயிநாதபுரம் டி.கே.எம்., மகளிர் கல்லுாரி, 39வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார். இதற்காக, ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 300 கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. தரமற்ற நிகர் நிலை பல்கலைகளை மூடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நடந்து வருகிறது.கட்டமைப்பு, ஆசிரியர் திறமைகளை வைத்து தான், நிகர்நிலை பல்கலை தரமில்லாதது, தரமுள்ளது என்பதை முடிவு செய்வோம். நாடு முழுவதும், அனைத்து நிகர்நிலைப் பல்கலையிலும், இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.இதற்கான அறிக்கை, நாளை டில்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். எந்தெந்த தரமற்ற கல்லுாரிகளை மூடுவது என்பது குறித்து, முடிவு செய்யப்படும்.
தமிழகத்துக்கு பொருந்தாது:அனைத்து கல்லுாரிகளிலும், ஹிந்தியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, ஏ, பி, வரிசை பட்டியலில் உள்ள, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் அனுப்பும்படி கூறப்பட்டது. ஆனால், தவறுதலாக, 'சி' வரிசையில் உள்ள தமிழகத்துக்கு அனுப்பி விட்டனர்.இந்த உத்தரவு, தமிழகத்துக்கு பொருந்தாது. மேலும், இந்த உத்தரவை, தமிழகத்தில் ரத்து செய்வதாகவும், திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக