லேபிள்கள்

26.9.14

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல 
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக