அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்வித்துறை
அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். மதுரை மாநாகராட்சி பள்ளிகளுக்கு நேற்று காலை மாநகராட்சி கல்வி அலுவலகம் மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், 'மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கிய ஜெயலலிதா சிறையில் உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி துவங்குவதற்கு முன் ஒரு சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து மதுரை
ஈ.வெ.ரா., மாநகராட்சி பெண்கள் பள்ளியில் மாணவிகள் சிலர், இறைவழிபாட்டிற்கு முன் பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில மாநகராட்சி பள்ளிகளில், பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை வகுப்பறைக்குள் செல்ல அங்கிருந்த ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியதாவது:
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த தகவல் எனக்கும் கிடைத்தது. ஈ.வெ.ரா., பள்ளியில் இறைவழிபாட்டிற்கு முன் சில நிமிடங்கள் மட்டும் மாணவிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அவர்களை வகுப்பறைக்குள் செல்ல உத்தரவிட்டனர், என்றார். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக