பள்ளியை மூடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்த தகவல், மாநிலம் முழுவதும் முழுமையாக சென்றடையாத தால், நேற்று பரவலாக, பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. 'சென்னை, திருவள்ளூர் உட்பட, சில மாவட்டங் களில், மாணவ, மாணவியர் வருகை குறைவாக இருந்தது' என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
நெருக்கடி முற்றியதால்...: ஜெ.,வை விடுவிக்கக் கோரி, தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு சார்பில், நேற்று, ஒரு நாள், பள்ளியை மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு என, நெருக்கடி முற்றியதால், பள்ளி மூடும் போராட்டத்தை, நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். 'ஏழாம் தேதி (நேற்று), வழக்கம் போல், பள்ளிகள் இயங்கும்' என, சங்க நிர்வாகி கள் அறிவித்தனர். முதலில், போராட்டத்தை அறிவித்ததும், சென்னை உட்பட மாநிலம் முழுவதும், பல பள்ளிகள், எஸ்.எம்.எஸ்., மூலம், மாணவர் களுக்கு, பள்ளி விடுமுறை செய்தியை அனுப்பி உள்ளன. ஆனால், நேற்று முன்தினம் வாபஸ் பெற்ற செய்தியை, மாணவர்களுக்கு தெரிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், நேற்று, சென்னை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில், சில பள்ளிகள் இயங்கவில்லை.
மேலும், பள்ளிகளுக்கு, மாணவர் வருகை குறைவாக இருந்ததாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பள்ளி, கல்லூரி திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதனால், மாவட்ட கலெக்டர்களே, நேரடியாக, இதில் தலையிட்டு கண்காணித்தனர்.
கண்காணித்தனர் கல்வித் துறை அதிகாரிகளும், அனைத்துப் பள்ளிகளும் திறந்திருக்கிறதா என்பதை கண்காணித்தனர். சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மாணவர் வருகை குறைவாக இருந்தது. எங்கும், பள்ளிகளை மூடியதாக, தகவல் வரவில்லை. நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடப்பட்டு இருக்கலாம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
'ஈ' அடித்த தாளாளர்கள் கூட்டம் : ஜெ.,வுக்கு ஆதரவாக, தனியார் பள்ளி தாளாளர்கள் கூட்டம், சென்னை கல்வித் துறை இயக்குனர் வளாகம் அருகில், நேற்று காலை நடந்தது. தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பின் செயலர், இளங்கோவன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல், 11:00 மணி வரை, கூட்டம் நடந்தது. தாளாளர்கள் ஒரு சிலர், தாங்கள், போராட்டத்தில் குதித்தது, நியாயம் என, கருத்து தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பள்ளி தாளாளர், நீலன் அரசு பேசுகையில், ''போராட்டம் நடத்துமாறு, எங்களை யாரும் தூண்டவில்லை. நாங்களாகத் தான், முடிவை எடுத்தோம். பின், மாணவர் நலன் கருதி, பள்ளி மூடும் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக