லேபிள்கள்

5.11.14

12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை

மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், சக மாணவ, மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடப்பதாக புகார்
எழுந்ததால் அவர்களை ஒரு மாதம் இடைநீக்கம் செய்துள்ளார். பின்னர், சூணாம்பேடு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனுமதித்துள்ளார். ஆனால், 5 மாணவர்களும் பள்ளியின் ஆசிரியைகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், 5 மாணவர்களும் அக்டோபர் 17-ம் தேதி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரி, 5 மாணவர்களும்
தங்களது பெற்றோர்களுடன் வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: 'மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் போலீஸார் இணைந்து, மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து, சக மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட 5 மாணவர்களையும் பள்ளியிலிருந்து நீக்கி உத்தர விட்டுள்ளோம். நீக்கம் செய்யப் பட்டதற்கான சான்றுகளை பெற்றோர் வாங்க மறுத்ததால், அவை பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. அதையும் அவர் கள் பெற்றுக்கொள்ளவில்லை' என்றார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் கேட்டபோது:
'குறிப்பிட்ட மாணவர் களால் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள்
பாதிக்கப் படக்கூடிய நிலை இருந்தால், பெற்றோர்களிடம் தெரிவித்து உரிய
நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தேன். இதன் பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதேநேரம், மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக