லேபிள்கள்

4.11.14

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். 

வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டியபிரிவினர் குறித்த பட்டியலில், போரில் ஊனமடைந்த ராணுவ வீரர்கள், மரண மடைந்த வீரர்களின் வாரிசுகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களின் பெயர்கள் உள்ளது.தமிழக அரசு கடந்த 1976ம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, எஸ்.சி., எஸ்.டி. சாதியை சேர்ந்தவர்களை கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியரின் பெயரையும் சேர்த்துள்ளது.எனவே, கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியருக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு அரசு பணிக்கு நடைபெறும் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தின் உதவியாளர் பணிக்கு அரசு ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த பணிக்கான தேர்வின்போது, கலப்புத் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுகடந்த அக்டோபர் 16ந் தேதி தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை முதன்மை செயலாளருக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஞானசேகர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.அதேநேரம், பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வினை அரசு மேற்கொள்ளலாம்.ஆனால், அந்த தேர்வு நடவடிக்கை அனைத்தும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது ஆகும்’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக