லேபிள்கள்

5.11.14

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
பள்ளிகளை நிர்வகிக்கின்றனர். பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின்
செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது, பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்), பங்களிப்பு ஓய்வூதிய நிதி (சிபிஎஃப்) மற்றும் ஓய்வூதிய கணக்கு வழக்குகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்கிறார்கள். உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனத்தில் 60 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 40 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெறுகின்றனர். இப்பணிக்கு முன்பு 100 சதவீதமும் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நேரடி நியமன முறை கடந்த 2009-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு நேரடியாக 67 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2-வது நேரடி நியமனம் 2012-ம்ஆண்டு 34 பேர் (2010-2011-ம் ஆண்டுக்கான காலியிடங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நேரடி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பிஎட் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். 2011-2012, 2012-2013, 2013-2014 என 3 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டையும் (2014-2014) சேர்த்தால் 4 ஆண்டுகள் ஆகிவிடும். நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பிட்ட பாடத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றிருப்பவர்கள் தேர்வெழுதலாம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மட்டும் 40 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள். 4 கல்வி ஆண்டுகளுக்குரிய நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக