விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார்.
தேவர் ஜயந்தி (அக்டோபர் 30) அன்று இரவு பள்ளியின் தேசியக் கொடிக்கம்பத்தில் சிலர் மஞ்சள்-பச்சை நிறமுடைய குறிப்பிட்ட ஒரு சமுதாயக் கொடியை ஏற்றிச் சென்றுள்ளார்கள். 31-ம் தேதி காலையில் பள்ளியின் அலுவலக உதவியாளர் கொடியைப் பார்த்து கழற்றி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். ஆனால் தலைமை ஆசிரியர் இது குறித்து எந்த நடவடிக்கையோ, கல்வித் துறை அலுவலர்களிடமோ தெரிவிக்கவில்லையாம். இது மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரிய வரவே அவர்கள் எதிர் தரப்பு சமுதாய மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று ஞாயிற்றுக்கிழமை கூறி பிரச்னையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த சமுதாயத்தின் பெரியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதனம் செய்ததையடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இருந்த போதிலும் இப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
பள்ளியின் தேசியக் கொடிக்கம்பத்தில், சமுதாயக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக, தலைமை ஆசிரியர் குருவையா, திங்கள்கிழமை கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக