லேபிள்கள்

7.12.14

தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?

அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை ஈடேற்ற, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்காக 2-ம் ஆண்டாக வெற்றிகரமாகத் தொடரும் ‘சூப்பர்-30’ திட்டத்தை, அரசே மாநிலம் முழுக்க நடைமுறைப்படுத்தலாம்
என்கின்றனர் கல்வியாளர்கள்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது அறிமுகப்படுத்திய ‘சூப்பர்-30’ என்ற உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம், பயின்ற அனைத்து மாணவ மாணவி களுமே அதிக மதிப்பெண்கள் பெற்று, தாங்கள் கனவு கண்ட தொழில் கல்லூரி களில் தற்போது படித்துவருகிறார்கள். இது குறித்து கல்வித் துறை முன்னாள் அதிகாரியும், ‘பெரம்பலூர்- சூப்பர் 30’ ஒருங்கிணைப்பாளருமான ந.ஜெயராமன் கூறும்போது,

“பிஹார் மாநிலம் பாட்னாவில் ஆனந்த்குமார் என்பவர் ஐஐடி படிக்கும் ஆசை நிறைவேறாத உறுத்தலில், ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக ‘சூப்பர்-30’ என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது, கடந்த ஆண்டு ‘சூப்பர்-30’ என்ற உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு பெரம்பலூரில் ஏற்பாடு செய்தார்.

முதல் தலைமுறை பட்டதாரியாகும், கிராமப்புற அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பால் கிராமப்புற கூலித் தொழிலாளியின் மகன் உதயகுமார் அதிக மதிப்பெண்களுடன் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் சேர, 17 பேர் பொறியியல் சேர்ந்தார்கள். கணிசமானோர் ஆட்சியரின் ஆளுமை உந்துதலில் ஐஏஎஸ் தேறவேண்டும் என்று கலைக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இத்திட்டம் எஸ்.ஆடுதுறை, குரும்பலூர் ஆகிய பள்ளிகளுக்கும் இவ்வாண்டு விரிவடைந்துள்ளது” என்றார்.

ராமநாதபுரம், கன்னியாகுமரியி லும் இத்திட்டம் ‘எலைட்’ என்ற பெய ரில் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம் ‘எலைட்’ ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, “2-ம் ஆண்டாக 100 மாணவ, மாணவிகள் இங்கு பயிற்சி பெறுகிறார்கள். இத்திட்டத்தின் அறிக்கையை தலைமைச் செயலக அலுவலர்களிடம் வழங்கினோம்.
ரூ.25 லட்சம் நிதி வழங்கி ஊக்குவித்ததோடு, திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் அமல்படுத்துவது குறித்த கருத்துகளையும் கேட்டறிந்தார்கள். அப்படி நடந்தால் தமிழகத்தில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெறும்” என்றார். கன்னியாகுமரி ‘எலைட்’ ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, தங்கள் மாவட்டத்தில் இவ்வருடம் 178 மாணவ மாணவிகள் பயன்பெறுவதாக தெரிவித்தார்.
ஆட்சியர் தரேஷ் அகமது மற்றும் கல்வியாளர்களுடன் பெரம்பலூரின் முதல் செட் ‘சூப்பர்-30’ வெற்றி மாணவர்கள். (கோப்புப் படம்)
மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவியர் 30 பேருக்கு உணவு, உறைவிட சிறப்புப் பயிற்சி, மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூறியதாவது: இங்கு பயிலும் மாணவ, மாணவியரை பயிற்சி தொடங்கி 40 தினங்களுக்குப் பிறகு சந்தித்துப் பேசியபோது அவர்களது தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்துள்ளதை காண முடிகிறது என்றார்.


இந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சம்பத் கூறியபோது, “சிறப்பு பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு 3 வேளை தரமான உணவு, தேநீர், சிற்றுண்டி ஆகியவை அளிக்கிறோம். பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் 30 பேர் இங்கு வந்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்” என்றார.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக