"அரசு மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் சமைக்கப்படும் மதிய உணவையே, மாணவர்கள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை,” என, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூறினார்.
பெங்களூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மைசூரு, குப்பேகலா அரசு பள்ளியில், தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் தயாரிக்கும் மதிய உணவை, சாப்பிட வேண்டாம் என, சில, சமூகத்தினர், தங்கள் குழந்தைகளிடம் கூறியதாக தெரிகிறது. குழந்தைகளுக்கு ஜாதி வித்தியாசம் போதிக்க கூடாது என்பதை, பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்கி, அவர்கள், ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தான், மதிய உணவு திட்டம் செயல்படுகிறது. இதில், தாழ்த்தப்பட்ட பெண் தயாரிக்கும் உணவை, பிற, சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிடக் கூடாது என, அவர்களின் பெற்றோர் வற்புறுத்துவது மனிதாபிமானமற்றது. மதிய உணவு தயாரிக்க அமர்த்தப்படும் ஊழியர்கள், அரசு இட ஒதுக்கீட்டின்படி அமர்த்தப்படுகின்றனர். இதில், ஜாதி வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தாழ்த்தப்பட்ட ஒருவரை இழிவுபடுத்தினால், சட்டப்படி அவர் மீது, நடவடிக்கை எடுக்க முடியும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அரசு விரும்புகிறது. அரசு பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவையே, மாணவர்கள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. விரைவில், இப்பிரச்னை சுமுக முடிவுக்கு வரும் என, கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக