அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இதில் ஊழியர்களின் சம்பள முறை, CTC ( Cost to the Company) அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒருமுறை வேலைக்கு சேர்ந்துவிட்டால், பெரும்பாலும் ஓய்வுபெறும் வரை பணியாற்றுகின்றனர். நோய் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வேலையை விடுவதில்லை. அரசு வேலையை விட்டு தனியார் வேலைக்கு செல்வதும் ரொம்பவே அரிது.
அதே சமயம் இன்றைய போட்டி நிறைந்த உலகில், தனியார் நிறுனங்களில் பணியாற்றுபவர்கள் அதிக சம்பளம், வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, வேலை திருப்தி ( Job satisfaction), சொந்த ஊரில் வேலை, குடும்பத்தினருடன் இருப்பது, குழந்தைகளின் படிப்பு, பெற்றோர்களை கவனிக்க வேண்டியது என பல்வேறு காரணங்களுக்காக வேலை மாறுகின்றனர். சிலர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்திலேயே வேறு நிறுவனத்திற்கு மாறுகின்றனர் என்றால், சிலர் ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் மாறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில், ஒரே நிறுவனத்தில் ஓய்வு பெறும் வரை வேலை பார்ப்பவர்கள் என்பது மிகக்குறைவான சதவீதத்தினரே.
இவ்வாறு வேலை மாறுபவர்கள் அல்லது வேலையை விடுபவர்கள், தாங்கள் பணிபுரிந்த காலத்தில் செலுத்திய பி.எப். பணத்தை உடனடியாக விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர். புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் தரப்படும் பி.எப். கணக்கு எண்ணுக்கு, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பி.எப். கணக்கில் சேர்ந்த தொகையை மாற்றிக்கொள்ளலாம் என்றபோதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறிப்பாக பழைய நிறுவனத்திற்கு அலைவது உள்ளிட்ட காரணங்களால் அதனை செய்ய முன்வருவதில்லை.
இதனால் முந்தையை பி.எப். பணத்தை எடுத்து ( with draw ) விடுகிறார்கள். இன்னும் சில குறிப்பிட்ட சதவீதத்தினர், முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை ஒரு சில ஆயிரங்களுக்குள் இருக்கும்பட்சத்தில், அதனை எடுக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத்தான் வேலை செய்யும் பணியாளர்கள் ஒவ்வொருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கு மாறாது. தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப். -பிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை செலுத்தப்படும்.
இந்த திட்டம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக வேலை செய்வோர், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதாவது பி.எப். பணத்தை எடுக்க ஒருவர் விண்ணப்பித்தால், அவர் 50 வயதை எட்டியிருந்தால் மட்டுமே முழு தொகையும் வழங்கப்படும். 50 வயது ஆகவில்லை என்றால், வழங்கப்பட வேண்டிய பி.எப். பணத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்துகொள்ளப்படும். அந்த தொகை, சம்பந்தப்பட்ட நபர் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, மீண்டும் பி.எப். கணக்கில் செலுத்தும் தொகையுடன் சேர்ந்து கொள்ளும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே. ஜலான், அண்மையில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு, அதனை அமல்படுத்த ஒப்புதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டம் முழுமையடைந்துவிட்டால், வேலை மாறுவதால் பி.எப். பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என ஜலான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக