பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லையில் விடைத்தாள் ‘டாப் சீட்‘ எரிந்து நாசமானதால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறை எண்.3ல் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களின் ‘டாப் சீட்கள்‘ கடந்த 21ம் தேதி இரவு எரிந்து நாசமானது. இந்த ‘டாப் சீட்கள்’ மெயின் சீட்டுடன் இணைத்து தைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் பதிவு எண்ணை எழுத தேவையில்லை.
இந்த டாப் சீட்களில் தான் மாணவர்களின் பதிவு எண், போட்டோ ஆகியவை இடம்பெற்றிருக்கும் இந்த தீ விபத்தில் 1,200க்கும் அதிகமான டாப் சீட்கள் எரிந்து நாசமானது. சீல் வைக்கப்பட்ட அந்த அறையில் ஒரு ஜன்னலும் இருந்துள்ளது. பொதுவாக தேர்வு தொடர்பான ஆவணங்கள் ஒரு அறையில் வைக்கும்போது, அந்த அறையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். பாதுகாப்பு குறைவான அறைகளில் விடைத்தாள்களை வைக்க அனுமதிக்கக் கூடாது.
தேர்வுகள் தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில், விடைத்தாள் எரிந்து நாசமான சம்பவம் தமிழக தேர்வுத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு நடைமுறைகளில் கவனக்குறைவாக முதன்மைக் கல்வி அலுவலர் நடந்து கொண¢டதாக பள்ளிக்கல்வித் துறை கருதியது. இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கஸ்தூரிபாய், நேற்று முன்தினம் இரவு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய சுவாமிநாதன் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். கஸ்தூரிபாய் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக