லேபிள்கள்

24.2.15

மீண்டும் ஒரு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.

இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்து அடித்தார். இதுபற்றி, அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, தொழிலதிபரான அவரது தந்தை ரவுடி கும்பலுடன் பள்ளியில் புகுந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார். மேலும் பள்ளியும் சூறையாடப்பட்டது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கிய புள்ளி என்பதால் மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசிரியர்களும், பள்ளிகளின் நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

மீண்டும் ஒரு சம்பவம்: திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் ஊராட்சி, அம்மாப்பேட்டை கிராமத்தில் சத்திய சாய் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் சுத்தானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக செங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (28) வேலை பார்க்கிறார்.
கடந்த 19ம் தேதி மாலை 4 மணியளவில், இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், உடன் படிக்கும் மாணவியுடன் பள்ளி வளாகத்தில் பைக்கில் சுற்றியுள்ளார். இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், மாணவனையும் மாணவியையும் கண்டித்துள்ளார்.

ஆசிரியர் கண்டித்ததை அறிந்ததும், அடுத்த நாள் காலை பள்ளிக்கு வந்த மாணவனின் தந்தை ரமேஷ் (40), அவரது நண்பர் ஏழுமலை (40) உள்பட 4 பேர், ஆசிரியர் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ராஜ்குமா ருக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது. அவரது அலறல் கேட்டு சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் வந்து அவரை மீட்டனர். பிறகு அவரை செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயேந்திரன், திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தலைவர் பிரின்ஸ் பாபுரஜேந்திரன், செயலா ளர் ரவிசுந்தரம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் நேற்று காலை, திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பள்ளி வளாகத்தில் நுழைந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு தரப்பிலும் புகார் வந்துள்ளதாகவும், தீவிர விசாரணைக்கு பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.இதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகிகள், வழக்குப்பதிவு செய்தால்தான் நாங்கள் காவல் நிலையத் தில் இருந்து கலைந்து செல்வோம் என்றனர். இதையடுத்து ஆசிரியரை தாக்கிய வெண்பேடு கிராமத்தை ரமேஷ், ஏழுமலை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் கொடுத்தனர். திருப்போரூர் அருகே மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்:

மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்க தலைவர் பிரின்ஸ் பாபுராஜேந்திரன் கூறியதாவது: 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என கூறி, ஒழுங்கீனத்தை கண்டித்ததால், ஒரு ஆசிரியர் தாக்கப்பட்டு, அவரது வலது காது கேட்கும் திறனை இழந்துள்ளார். எனவே சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தினால் மட்டுமே நாங்கள் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலும். தவறு செய்யும் மாணவனை, ஆசிரியர் கண்டிக்க உரிமை இல்லை என்றால், அடுத்து வரும் சமுதாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் செல்வகுமார் கூறுகையில், மாணவர்களிடம் இருந்தும், அவர்களின் உறவினர்கள் என்று கூறி வருபவர்களிடம் இருந்தும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு உரிய மருத்துவ செலவினங்களை தரவேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக