'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலு கமிட்டி எச்சரித்துள்ளது.
விருப்பம்போல்...:
தனியார் பிரிவில் வரும், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அமைக்கப்பட்டது. சுயநிதி பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவரான, நீதிபதி சிங்காரவேலு, தமிழகத்தில் உள்ள, 11 ஆயிரம் சுயநிதி பள்ளிகளுக்கு தனித்தனியே ஆய்வு நடத்தினார்.
நிர்ணயம்:
பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, பாடத் திட்டம், கற்பிக்கும் முறைகள், கூடுதல் கற்பித்தல் வசதி ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கமிட்டி நியமித்த கட்டணத்தையே மாணவர்களிடம் வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலு கமிட்டி எச்சரிக்கை விடுத்தது. இதை ஓரளவு பின்பற்றிய பள்ளிகள், வேறு வகையில், மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் தரப்பில் இருந்து, கமிட்டிக்கு புகார்கள் வந்துள்ளன.
மறைமுகமாக...:
புகாருக்குள்ளான பள்ளிகளை, கமிட்டி விசாரித்ததில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஆயத்த வகுப்புக் கட்டணம், விடுதியில் சிறப்பு டியூஷன் கட்டணம், பள்ளிகளில், காலை, மாலை சிறப்பு வகுப்புக் கட்டணம் என, மறைமுகமாக வசூலித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பறிமுதல் செய்யுமாறு, பள்ளிக் கல்வித் துறைக்கு கட்டண நிர்ணயக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை:
மேலும், கல்விக் கட்டணம், புத்தகம், நோட்டுகளுக்கான கட்டணம் உள்ளிட்ட கமிட்டி பரிந்துரைத்த கட்டண விவரங்களைத் தவிர, புதிய பெயரில் டியூஷன் கட்டணம் வசூலித்தால், பள்ளியின் மீது விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக