லேபிள்கள்

24.2.15

கல்வி அதிகாரிகள் மெத்தனம்; பாதிப்பில் பொதுத்தேர்வு மாணவர்கள்.

கோவை:மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தால், ஒரு சிலபள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாகவும், சில பள்ளிகளில் பற்றாக்குறையாகவும் உள்ளனர். இதனால், பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வின் காரணத்தால், ஆசிரியர்கள் பலர் மாறுதலில் சென்றனர். இதனால், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே, மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்படுகிறது.தற்போது, உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர்காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள், கடந்த இரண்டு மாதங்களாக இல்லாமல் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாதிரி தேர்வுகள், பயிற்சிகள் வழங்க ஆளில்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தேவைக்கு அதிகமாக,மூன்று பட்டதாரி அறிவியல் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதே சமயம், கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒரு அறிவியல் ஆசிரியரும் இல்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், ’எங்கள் வகுப்பில், ஆங்கில பாடம்,யாருக்கும் புரியவில்லை. ஆசிரியர் அனைத்து பாடங்களையும் முடிக்கும் முன், மாறுதலில் சென்றுவிட்டார். பொதுத்தேர்வுக்கு முன் பயிற்சிகள் வழங்கவும், மாதிரி தேர்வுகள் நடத்தவும், எங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் ஆளில்லை. தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் பலனில்லை. தேர்வுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளது, எங்களுக்கு கட்டாயம் பயிற்சிகள் தேவை’ என்றார்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ’ஜூன் மாதம் கலந்தாய்வை முறையாக நடத்தி இருந்தால், இப்பிரச்னைக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும். மிகவும் காலதாமதமாக நடத்தியதால், தேர்வு சமயத்தில மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். காலியாக, உள்ள பணியிடங்களில் மாற்று பணி என்ற பெயரிலாவது வேறு ஆசிரியர்களை நியமித்து பயிற்சிகள் அளிக்கலாம். ஆனால், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் மெத்தனமாக உள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் சரிவதுடன், மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக