லேபிள்கள்

9.6.15

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இல்லை

இலவச மாணவர் சேர்க்கைக்கான, 25 சதவீத இட விவரங்களை, மெட்ரிக் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதில், மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. இந்த பள்ளிகளின் பட்டியல் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

25 சதவீத ஒதுக்கீடு:

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலைக் கல்வியான,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

இச்சட்டத்தை பின்பற்றி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும், நுழைவு வகுப்பான,எல்.கே.ஜி.,யில் இலவச சேர்க்கை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், தனியார் பள்ளி களில் இலவச மாணவர் சேர்க்கை முறையாக வழங்கவில்லை என்று, சமூக ஆர்வலர், 'பாடம்' அ.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மூன்று நாட்களில், இலவச மாணவர் சேர்க்கை இட விவரங்களை, இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டது.


இதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின், http://tnmatricschools.com/ இணையதளத்தில், இலவச இடங்களின் எண்ணிக்கை, பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதுவரை இந்த இடங்கள் நிரப்பப்படாது. பின், மெட்ரிக் இயக்குனரகம் அறிவிக்கும் தேதியில், பெற்றோர் முன், குலுக்கல் முறையில் யாருக்கு இடம் என முடிவு செய்யப்படும்.

நேற்று அறிவிக்கப்பட்ட பட்டியலில், 32 மாவட்டங்களில் உள்ள, 3,720 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. சென்னையில், 321 பள்ளிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
அதேநேரம், சி.பி.எஸ்.இ., மற்றும், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. 


இதுகுறித்து, 'பாடம்' அ.நாராயணன் கூறும்போது, ''தனியார் பள்ளிகளின் பட்டியல் பெயரளவில் வெளியிடப்பட்டுள்ளன. ''சி.பி.எஸ்.இ., பள்ளி களின் பட்டியல் இடம் பெறவில்லை. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல இயக்குனர் மற்றும் மெட்ரிக் இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உள்ளேன்,'' என்றார்.இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் காலியிடங்கள் மற்றும் இலவச மாணவர் சேர்க்கை விவரங்களை பட்டியல் எடுக்க, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் வழியாக, மெட்ரிக் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.பள்ளிகள் 'எஸ்கேப்!':நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், பல மெட்ரிக் பள்ளிகளின் காலியிடங்கள் இடம் பெறவில்லை. 

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அவை சிறுபான்மைஅந்தஸ்து பெற்றவை' என்றனர். ஆனால், பல பள்ளிகள் சிறுபான்மை அந்தஸ்து பெறாமல்,வெறுமனே விண்ணப்பித்து விட்டு, 'எஸ்கேப்' ஆகி விட்டதாகவும், இதற்கு அதிகாரி களே வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகிஉள்ளன. 


'மாஸ்டர் டிரெய்னர்ஸ்' திட்டம்: 

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட ஆசிரியர்களுக்கு, 'அகாடமிக்' (கல்வி சார்ந்த) பயிற்சி அளிக்க, பல்கலைகள், கல்லுாரிகளின் திறமையான முன்னாள் வேந்தர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை, கவுரவப் பணியில் நியமிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., இணைச் செயலர் சுதர்ஷன் ராவ் பிறப்பித்துள்ள உத்தரவில், 'சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மாஸ்டர் டிரெய்னர்ஸ் என்ற பெயரில், கல்வி நிபுணர்கள் வரவேற்கப்படுகின்றனர். விருப்பமுள்ளோர், ஜூலை 3ம் தேதிக்குள், 'ஆன்லைனில்' சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம். மண்டல அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்' என, தெரிவித்து உள்ளார்.


ஜூலை 16ல் தனித்தேர்வு :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜூ, 16ல் தனித்தேர்வு நடக்கிறது.
சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கான, 'கம்பார்ட்மென்டல்' தனித்தேர்வு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஜூலை 16ல் நடக்கிறது.இதற்கு விண்ணப்பிக்க, ஜூன் 22ம் தேதி கடைசி நாள். தாமத விண்ணப்பம், தினமும், 10ரூபாய் கூடுதலாக சேர்த்து, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு ஆகஸ்ட், 6ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு, 13ம் தேதியும் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக