லேபிள்கள்

11.6.15

மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க உத்தரவு

மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாகப் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 வேலூர் மாவட்டம், கனக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இ.பூங்கோதை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 
 வேலூர் மாவட்டம், கம்பதம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 1992-ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 
 கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்றேன். பிறகு, அதே ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி பணிக்குத் திரும்பினேன். 
 இந்த நிலையில், மீண்டும் உடல் நிலை சரியில்லாததால் அதே ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மீண்டும் மருத்துவ விடுப்பில் சென்றேன். இதற்கு பள்ளி நிர்வாகமும் அனுமதி வழங்கியது.
 ஏப்ரல் மாதம் மருத்துவ வாரியம் என்னை ஆய்வு செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து 24-ஆம் தேதி பணியில் சேர சென்றபோது பள்ளி தலைமை ஆசிரியர் என்னை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. 
 இதையடுத்து வேலூர் மாவட்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தபோது, என்னை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்டும் பள்ளி நிர்வாகம் என்னை அனுமதிக்கவில்லை.
 மருத்துவச் சான்றிதழில் இருந்த கையொப்பம் எனது இல்லை எனக் கூறி என்னை பணியில் அனுமதிக்கவில்லை. எனவே, பணியில் மீண்டும் அனுமதிக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
 மேலும், 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை எனக்கு ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார். 
 இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மனுதாரரை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக