பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை, மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு குறித்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் "எக்ஸீட்' கல்வி நிறுவனம் செய்திருந்தது.
இதில், சென்னை ஐஐடி மேலாண்மைத் துறையின் பேராசிரியர் எல்.எஸ்.கணேஷ் பேசியதாவது:
தனிநபர், தொழில் வெற்றிக்கு தொடக்கக் கல்வியே அடித்தளமாக அமைகிறது. அந்த நிலையில்தான் குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் திறன், கேட்டல் திறன், தெளிவாக காட்சிப் படுத்துதல், தகவல் பரிமாற்றம், கேள்விகள் எழுப்புதல் போன்ற திறமைகளை வளர்க்க வேண்டும்.
மனப்பாடக் கல்விமுறை: பிரச்னைகளைத் தீர்ப்பது, சவால்களை ஆற்றலுடன் சமாளித்தல் போன்றவற்றில் அவர்கள் குழுக்களாகச் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் கல்வியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாது.
எனவே, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றலில் நவீன தொழில்நுட்பம், உத்திகளைப் புகுத்த வேண்டும் என்றார் அவர்.
"எக்ஸீட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுஸ்துப் நாயக் பேசுகையில், இந்தியாவில் 1,600 பள்ளிகளில் 60,000 ஆசிரியர்கள் மூலமாக 7.50 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.
சென்னையில் 150 பள்ளிகளில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்க ஆலோசித்து வருகிறோம் என்றார்.
முன்னதாக, அந்த நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களின் தொழில்முறை முன்னேற்றம் குறித்த டேப் (பஹல்ல்) என்ற செயலி, ஆங்கில வழிக் கல்வி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் "எக்ஸீட் ஃப்யூச்சர்' திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக