தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி வளாகத்திலேயே புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலை வகித்தார். இதில், 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி படலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றன. மாணவர்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தினை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் ஆதார் அட்டை இல்லாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு. நாகேந்திரன், கோட்டாட்சியர் அ. மனோகரன், வட்டாட்சியர்கள் செழியன், சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக