லேபிள்கள்

16.10.15

அப்துல்கலாம் குறித்த கட்டுரை - பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: தமிழக அரசு

அப்துல்கலாம் பிறந்தநாள் தினமான கட்டுரை - பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும், ‘அணுசக்தி நாயகன்’ என்றும் ‘தலைசிறந்த விஞ்ஞானி’ என்றும் ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சிந்தனை எப்பொழுதும் மாணவர்கள், இளைஞர்களை பற்றியே இருந்தது. டாக்டர் அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.

இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்து சக்தியாக விளங்கினார். எனவே அப்துல் கலாம் பிறந்த தினமான இன்று (வியாழக்கிழமை) ‘இளைஞர் எழுச்சி நாள்’ என தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று ‘இளைஞர் எழுச்சி நாள்’ ஆக கொண்டாடப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு ஆணையிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்கும் இளைஞர் பேரணி காலை 9 மணிக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 மாணவ-மாணவிகள் இந்தப் பேரணியில் பங்கேற்பர். இவர்கள் இளைஞர் எழுச்சி நாள் தொடர்பான பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்வர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு அறிவியல் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்டுள்ளது. அதில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் தமிழக அமைச்சர்களால் பரிசுகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்டு அதில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவில் சென்னையில் நேற்று மற்றும் இன்று நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று மற்றும் நாளை நடத்தப்படுகிறது. இதில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 102 அறிவியல் காட்சிப் பொருட்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானிகள் விண்வெளியியல் குறித்து உரையாற்றுகின்றனர். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அப்துல் கலாமின் நாட்டு வளர்ச்சி குறித்த முன்னேற்ற சிந்தனைகள் பற்றிய உரைகள் நிகழ்த்தப்படும்.

அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று, அவர் படித்த பள்ளியிலிருந்து அவர் வசித்த இல்லம் வரை மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.

இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக சி.யூ.ஐ.சி அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெறும். 

இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார். உயர்கல்வித் துறை அமைச்சர், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவார். இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக