மாநிலப் பாடத்திட்டத்தைத் தரம் உயர்த்துவதற்காக, அந்தப் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிற பாடத் திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்த தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஓய்வு பெற்ற அலுவலர்கள் அமைப்பு முடிவு எடுத்துள்ளது.
இந்த அமைப்பின் உயர் மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக அதன் பொதுச்செயலாளரும், பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநருமான கே.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள மாநிலப் பாடத்திட்டத்தினை பிற கல்வி வாரிய பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்படும். இதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கல்வி அதிகாரியுமான ஆர்.பழனியாண்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இந்த ஆய்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்.
அதேபோல், பிளஸ் 2 மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் ஆய்வு செய்து கருத்துகள் சமர்ப்பிக்கவும் இந்தக் குழு முடிவு எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் நிர்வாகிகளும் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர்களுமான சி.பழனிவேலு, பி.மணி, எஸ்.பரமசிவம், ஆர்.நாராயணசாமி, கே.தேவராஜன் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக