லேபிள்கள்

25.10.15

ரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை

கோவை பள்ளி ஆசிரியர்கள், ஆறு பேர் வங்கி கணக்கில் இருந்து, நுாதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப உதவியுடன், ஏ.டி.எம்., கார்டின் ரகசிய தகவல்களை பெற்று, பணம் திருடும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறும் மர்ம நபர்கள், நம்பகமாக பேசி, வாடிக்கையாளர்களிடம் இருந்து ரகசிய எண் விவரங்களை பெற்று, பணம் திருடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட, கோவை பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி கூறுகையில், ''கடந்த வாரம் என் மொபைல் போனுக்கு, வங்கியிலிருந்து பேசுவதாக அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாகியுள்ளது' எனக்கூறி விட்டு, கார்டின், முன்புறம், பின்புறம் உள்ள எண்களை கேட்டார்.

உண்மையில் எனது ஏ.டி.எம்., கார்டு, அடுத்த மாதம் காலாவதியாகிறது. இதனால் அந்த நபரிடம், தகவல்களை தெரிவித்துவிட்டேன். ''அடுத்த இரண்டு நிமிடத்தில், 10 ஆயிரம் ரூபாய் வடமாநிலத்தில் உள்ள ஓர் நகரின் ஏ.டி.எம்., மையத்திலிருந்து எடுத்துவிட்டதாக குறுந்தகவல் வந்தது.

அதிர்ச்சி அடைந்த நான், மீதம் இருந்த பணத்தை உடனடியாக எடுத்துவிட்டு, வங்கியில் புகார் பதிவு செய்தேன். வங்கியில் இருக்கும்போதே, பல முறை என் வங்கி கணக்கில் பணம் எடுக்க முயற்சித்துள்ளனர். அதுசார்ந்த குறுந்தகவல்களையும் வங்கி மேலாளரிடம் காண்பித்தேன். எனது, ஏ.டி.எம்., காலாவதி தேதி மர்ம நபர்களுக்கு எவ்வாறு தெரிந்தது என்று புரியவில்லை,'' என்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''கோவையில் இதுவரை, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இதுபோன்ற மர்ம போன் அழைப்புகள் வந்துள்ளன. அதில், ஆறு பேர், விழிப்புணர்வு இன்றி தகவல்களை கொடுத்து பணத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு இதுபோன்று அழைப்புகள் வருவது அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் இது குறித்த பாதுகாப்பை உறுதிசெய்ய மனு அனுப்பியுள்ளோம், '' என்றார்.

கோவை முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், '' பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். ஏ.டி.எம்., கார்டு எண், ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட எவ்வித ரகசிய தகவல்களையும் வங்கிகள் கேட்பதில்லை. ''அவ்வாறு, வரும் அழைப்புகளுக்கு மதிப்பளிக்கவேண்டாம், குறிப்பிட்ட மொபைல் நம்பர்களை வங்கியிலோ, காவல் துறை சைபர்கிரைம் பிரிவிலோ கொடுத்து புகார் செய்யலாம். இதுபோன்ற, மோசடி அழைப்புகள் மூலம் பணம் ஏமாந்தால், வங்கிகள் எவ்வகையிலும் பொறுப்பேற்காது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக