லேபிள்கள்

21.4.16

மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது: அதிகாரி தகவல்

மருத்துவப்படிப்பில் சேர இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பொது நுழைவுத்தேர்வு கிடையாது என்றும்,
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் கட்- ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார். 
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி நேற்று சில மாவட்டங்களில் முடிவடைந்துவிட்டது. பல மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முடிவடைய உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைய மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. மே மாதம் 7-ந்தேதிக்கு முன்பாக முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை மிக தீவிரமாக உள்ளது. 
தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளில் ஒரு பகுதியினர் கலை அறிவியல் கல்லூரியில் படிக்கச்சென்று விடுவார்கள். ஒரு பகுதியினர் மருத்துவம் படிக்கச்செல்வார்கள். பெரும்பகுதியினர் பொறியியல் படிக்க செல்வார்கள். 
மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டில் தடை இருந்தது. அந்த தடையை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பு ஆகிய மருத்துவப்படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு உண்டா? இல்லையா? என்று மாணவ-மாணவிகள் குழப்பம் அடைந்து இருந்தனர். 
அவர்கள் குழப்பத்தை போக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிளஸ்-2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், மருத்துவப்படிப்பில் சேர நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு இல்லை என்றும் தெரிவித்தார். 
மருத்துவம் படிக்க எத்தனை இடங்கள் உள்ளன என்று மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது:- 
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர்வதற்கு மொத்தம் 2 ஆயிரத்து 655 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம். மீதம் உள்ள 2 ஆயிரத்து 287 இடங்களில் எம்.பி.பி.எஸ்.சேரலாம். 
இது போக இ.எஸ்.ஐ.கல்லூரியில் இருந்து 65 இடங்கள் கலந்தாய்வுக்கு வருகின்றன. அந்த இடங்களையும் சேர்த்தால் 2 ஆயிரத்து 324 இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 8 உள்ளன. இந்த கல்லூரிகளில் 1010 இடங்கள் உள்ளன. அதில் இருந்து 595 இடங்கள் கலந்தாய்வுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர 2 ஆயிரத்து 917 இடங்கள் உள்ளன. 
அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்றே ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. அது போக சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 17 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து 970 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக வருகின்றன. இந்த இடங்கள் போக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 1,610 இடங்கள் உள்ளன. பல் மருத்துவக்கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர மொத்தம் 1,070 இடங்கள் உள்ளன. 
கடந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காத மருத்துவக்கல்லூரிகளுக்கு இந்த வருடம் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் விவரம் பற்றி அண்ணாபல்கலைக்கழக அதிகாரி கூறியதாவது:- 
கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி.கல்லூரி உள்ளிட்ட 4 அண்ணாபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள் 13, மத்திய கல்வி நிறுவனங்கள்3, அரசு பொறியியல் கல்லூரிகள் 10, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 505 , மொத்தத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1 லட்சத்து 77 ஆயிரம் இடங்கள் வரும். 55 ஆயிரம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக