தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களைஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை.அதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்க பள்ளிகள்மூடப்படுகின்றன; அங்கு படிக்கும் மாணவர்கள், அருகிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சமகல்வி இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுபற்றிய தகவல்கள் பெற்றுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டு களில், 11 மாவட்டங்களில், 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் படித்த மாணவர்கள், சற்று தொலைவிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 11 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர், ஐந்து; நீலகிரி, நான்கு; திருவள்ளூர், கடலுார் மற்றும் கோவை தலா, மூன்று; ராமநாதபுரம், இரண்டு; திருநெல்வேலி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா, ஒன்று என, 35 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சமகல்வி இயக்கத்தினர், 12 மாவட்டங்களில், 155 பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். 83 சதவீத அரசு தொடக்க பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நிலையே உள்ளது; அவர்களுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துவதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக