ஊராட்சிகளில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு காலாண்டு விடுமுறை, 'கட்' ஆனது. உதவியாளர் நிலையில் உள்ளோரை ஊராட்சி வார்டு பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் பற்றாக்குறை உள்ளதால், அந்தந்த பகுதி ஆசிரியர்களை உதவி தேர்தல் அதிகாரியாக நியமித்தனர். மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அக்.,2 வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டது. ஆனால், அக்., 3 வரை வேட்பு மனு பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்கூட்டியே நியமன ஆணை வழங்கிய போதிலும், திடீரென தேர்தல் தேதி அறிவித்ததால் விடுமுறைக்கு வெளியூர் சென்றோர் அவசர, அவசரமாக ஊராட்சிகளுக்கு வந்தனர். சில ஊராட்சிகளில் வேட்புமனு வாங்க சரியான இடவசதியும் இல்லை. வசதி இல்லாத இடங்களில் ஓட்டுச்சாவடி உள்ள பள்ளிகளில் அமர்ந்து வேட்புமனுக்களை வாங்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அவர்கள்,' விடுமுறையும் போச்சு; வசதியும் இல்லை' என, புலம்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக