லேபிள்கள்

13.2.17

'உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் அறிவை வளர்க்கணும்'

'மாணவர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், தலைமை தேர்தல் கமிஷனர், நசிம் ஜைதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.


 அதில், பள்ளிப் பாடத்தில் தேர்தல் அறிவை புகட்டும் வகையிலான பாடங்கள் சேர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.உயர்நிலைப் பள்ளி மட்டத்திலும், அதற்கு மேற்பட்ட படிப்புகளின் போதும், தேர்தல் அறிவை வளர்க்கும் பாடங்கள் சேர்க்கப்படுவதால் சிறந்த பயன் கிடைக்கும் என, அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில், அந்த கடிதத்திற்கு பதில் அளித்திருந்த அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'நாட்டின் தேசிய பள்ளி பாடத் திட்டங்களை வடிவமைக்கும், என்.சி.இ.ஆர்.டி.,யுடன், தேர்தல் கமிஷன் கூறிய யோசனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த பாடத்திட்ட ஆய்வின் போது தேர்தல் கமிஷனின் யோசனைகளை கருத்தில் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது' என்றார்.

இதற்கிடையே, பள்ளிகள் உதவியுடன் தேர்தல் அறிவை மாணவர்களுக்கு புகட்டும் வகையிலான சிறப்பு திட்டத்தை, தேர்தல் நிபுணர் குழு ஜனவரியில் துவக்கியது. இத்திட்டப்படி, 5,000 தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், 15 - 17 வயதுடைய மாணவர்களுடன் கலந்துரையாடினர். 

தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நாடு முழுவதும், 15 - 17 வயதினராக, 6.2 கோடி பேர் உள்ளனர். இவர்களை, வருங்கால வாக்காளர்களாக, தேர்தல் கமிஷன் வர்ணித்துள்ளது. இவர்களில் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி பேர், 18 வயது நிரம்பி, முதல் முறை ஓட்டளிக்க தகுதி பெறுபவராக உருவெடுக்கின்றனர். இதுகுறித்து, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25ல், நடந்த நிகழ்ச்சியின் போது, தலைமை தேர்தல் ஆணையர், நசிம் ஜைதி கூறுகையில், 'தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முதல் முறை ஓட்டளிக்கும் தகுதி பெறுவோர், தேர்தலில் கட்டாயம் பங்கு பெறுவதை ஊக்குவிக்கும்' என்றார்.
இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக