லேபிள்கள்

17.2.17

என்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ.க்கு உத்தரவு

தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரித்து வழங்கும் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்சிஇஆர்டி புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் தனியாரிடம் புத்தகங்களை கூடுதல் விலை கொடுத்து வேறு புத்தகங்கள் வாங்குவதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தரமான கல்வி வழங்கும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல பள்ளிகளில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தனியார் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையில் கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பள்ளி நிர்வாகிகளை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த கடை அதிபர்கள் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்வதாக தெரியவந்துள்ளது.

எனவே முறைகேட்டை தவிர்க்கும் வகையில் 2017-18ம் ஆண்டு முதல் என்சிஇஆர்டி புத்தகங்கள் போதுமான அளவுக்கு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நாடு முழுவதும் உள்ள 680 மையங்கள் மூலம் மார்ச் மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ப்ளஸ்: மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஏற்கனவே இருந்த மத்தியக் கல்விக் கழகம் உள்ளிட்ட 7 அமைப்புகளை ஒருங்கிணைத்து, தன்னாட்சி அமைப்புடன் 1961ல் நிறுவப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக