திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்கு
மாற்ற வேண்டும்.
மாற்ற வேண்டும்.
தமிழக அரசானது, மத்திய அரசின் திட்ட வேலையை, மத்திய-மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2012-ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை (உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல்) ஒப்பந்த அடிப்படையில், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாக பணியாற்றும் வகையில் நியமித்தது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு தொகுப்பூதியம் முதலில் கிராமக் கல்விக்குழு மூலமாகமாகவும், தற்போது பள்ளி மேலாண்மைக்குழுவாலும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, தொடர் கோரிக்கையான முழுநேரப் பணி வழங்கவில்லை.
கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000/-, ஹரியானாவில் ரூ.10000/- வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, மற்ற மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 10000/- முதல் 15000/-வரை தொகுப்பூதியமும், ஒன்றுக்கும் அதிகமான பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் இதுவரை தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே பொருளாதார சிக்கல்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400/- கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலையில் உள்ளதால் பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது. மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை.
பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000/- தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தமிழக அரசு தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல 16549 பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக