திண்டுக்கல்: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் நியமன காலம் முடிய 17 நாட்களே உள்ள நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்ைத தொடர்ந்து, 'பழைய ஒய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் என, 2016, பிப்.,19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். பின், தேர்தல் நெருங்கியதைத் தொடர்ந்து, பிப்.26ல் 2016ல் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் வல்லுநர்குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. சட்டசபை தேர்தலுக்குப்பின், முறையான ஆய்வுகள் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக கூறி, 2016 செப்.26 வரை மூன்று மாதம் குழுவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் கால அவகாசம் வேண்டும் எனக்கூறி கடந்த டிச.25 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது.இதன் பின்பும் இந்த குழுவின் செயல்பாடுகள் குறித்து விபரம் எதுவும் வெளியாகவில்லை. முன்னாள் முதல்வர் ஜெ., மறைவு, அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், இக்குழுவின் தலைவராகவும், முதல்வரின் அலுவலக சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றிய சாந்தாஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
17 நாளே ஆயுட்காலம் : இந்நிலையில் கடந்த மார்ச் 2ம் தேதியிட்டு நேற்று அரசு ஓர் அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் 3வது முறையாக கடந்த 2016, டிச.,26ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு வல்லுநர் குழுவின் பணிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. குழுவிற்கு தலைவரே இல்லாத நிலையில் அது குறித்து எதுவும் தெரிவிக்காமல், வெறும் 17 நாட்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பே, என கருதுகிறோம்.தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்து 4.5 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதற்காக அறிக்கை எதுவும் வெளியிடாமல் தொடர்ந்து செயல்பாடற்ற கால நீட்டிப்பு செய்வது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. இப்படியே இக்குழு வரும் லோக்சபா தேர்தல் வரை நீட்டிக்கப்படலாம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக