லேபிள்கள்

8.3.17

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வில் குழப்பம் : நியாயமான முறையில் தேர்வு நடக்குமா

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வில், மீண்டும், மீண்டும் குழப்பம் ஏற்படுவதால் நியாயமான முறையில், துணைவேந்தர் தேர்வு நடக்குமா என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
இப்பல்கலை, புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில், சென்னை பல்கலை புள்ளியியல் துறை முன்னாள் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் ஜெயின் கல்லுாரி பேராசிரியர் ஹரிஸ் மேத்தா, மதுரை காமராஜ் பல்கலை கல்வியியல் துறை ஓய்வு பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கன்வீனர் முருதாசின், ஒருதலைபட்ச செயல்பாட்டால் 'தகுதியில்லாதவரை பரிந்துரை செய்ய மாட்டேன்,' என செனட் பிரதிநிதியாக ஏற்கெனவே இருந்த ராமசாமி தேர்வு குழுவில் இருந்து வெளியேறினார். இதன்பின், ராமகிருஷ்ணன், புதிய செனட் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களில் மூன்று முறை இக்குழு கூட்டம் நடந்தும் எவ்வித முன்னேற்றம் இல்லை.

 உறுப்பினர்கள் அதிருப்தி: 'பல்கலை மானிய குழு விதிப்படியும், நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையிலும் தகுதி மற்றும் வெளிப்படை தன்மை கூடிய மதிப்பெண் அடிப்படையில் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்பட வேண்டும்,' என தீர்மானித்து விளம்பரம் வெளியிடப்பட்டது. 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் பின் நடந்த இரண்டு தேர்வுக் குழுக் கூட்டங்களில், கன்வீனர் நடவடிக்கை காரணமாக உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என தகவல் வெளியாகியது. இதனால் மூன்று நபர் கொண்ட 'துணைவேந்தர் பேனல்' இறுதி செய்யப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, கன்வீனர் சார்ந்த ஜாதியை சேர்ந்த செல்லத்துரை, காளிராஜ், சவுந்திரபாண்டியன், மணிக்குமார், நளினி ஆகிய ஐந்து பேராசிரியர்கள் பெயர்களை மட்டும் தேர்வு செய்துவிட்டு, இதையே அரசும், கவர்னர் அலுவலக செயலரும் பரிந்துரைத்ததாக பொய்யான தகவல் முருகதாசால் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக தேர்வுக் குழு உறுப்பினர்கள் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர் கடைசி கூட்டத்தில், "அதுகுறித்து அரசு எங்களிடமும் தெரிவிக்கட்டும்," என கூறி கூட்டத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகின.


 இந்நிலையில் தான், 'பிப்.,24க்குள் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவர்,' எனவும், 'துணைவேந்தர் பேனல் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது,' என்ற வகையில் தகவல் வெளியிட்டு திசை திருப்பும் வேலையும் அரங்கேறியது.பேச்சு... பேரம்...புகார்... இந்நிலையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த பேராசிரியர் சிலரை, தனியாக அலைபேசியில் அழைத்து, அவர்களுடன் முருகதாஸ் பேரம் பேசியதும், மதுரை காமராஜ் பல்கலை நிர்வாகத்தில் தலையிடும் வகையில் இருந்த அலைபேசி உரையாடலையும் பதிவு செய்து கவர்னருக்கு புகாராகவும் அனுப்பப்பட்டுள்ளது.அத்துடன், முருகதாஸ் பரிந்துரை செய்த ஐந்து பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரு பேராசிரியருக்கு, அடிப்படை தகுதியான 'பத்து ஆண்டுகள் பேராசிரியர்' தகுதி இல்லை. அவரது படிப்பு மற்றும் ஜாதி சான்றிதழிலும் சர்ச்சை உள்ளது. அவர் மீது 16.5.2016ல் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கும் பதிவாகி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விபரம் குறித்த ஆதாரங்களும் அந்த புகாரில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்றொரு பேராசிரியர், சென்னை அண்ணா பல்கலையில் சில காலம் மட்டும் துணைவேந்தர் பயிற்சி பெற்றவர். அவர் மீதும் பல்கலை நிதித்துறை முறைகேடு, தணிக்கை குறைபாடு புகார்கள் நிலுவையில் உள்ளன. இதுபோல் முருதாஸ் பரிந்துரைத்த ஐந்து பேருக்கும் பல்வேறு புகார் பின்னணி உள்ளன.வீடியோ பதிவு வேண்டும்: மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு மீது இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பியுள்ளதால் இக்குழுவிற்கு கவர்னர் சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதன்படி,* துணைவேந்தர் தேர்வுக் குழுக் கூட்டத்தை கவர்னர் முன்னிலையில், அவரது அலுவலகத்தில் நடத்த வேண்டும்.* தேர்வு முறை மற்றும் அதுகுறித்த கலந்துரையாடல் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.* அனைத்து விண்ணப்பதாரருக்கும் அளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் விபரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.* தேர்வு செய்யப்பட்ட மூவர் பேனலில் உள்ள கன்வீனர், உறுப்பினர்கள் இருவரின் கையெழுத்து விவரம் 'வெப்சைட்டில்' வெளியிட வேண்டும்.'ஸ்பான்சர்' முறையா: முருகதாஸ் பரிந்துரைத்த ஐந்து பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் யாராவது ஒருவரை புதிய துணைவேந்தராக நியமிக்க, 'மன்னார்குடி கும்பல்' பின்னணியுடன், மணல் தொழிலில் ஈடுபட்டுள்ள தென் மாவட்ட தொழிலதிபர் ஒருவர் பண உதவி (ஸ்பான்சர்) செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியாயமான முறையில் தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.இதுபோன்ற புதுப்புது சர்ச்சைகளால், இரண்டு ஆண்டுகளாக நியமிக்க முடியாமல் உள்ள புதிய துணைவேந்தர் தேர்வு, மேலும் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் இதில் சிறப்பு கவனம் செலுத்தி தகுதி, திறமை அடிப்படையில் துணைவேந்தரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக