லேபிள்கள்

8.5.17

'நீட்' தேர்வில் பிளஸ் 1 பாடத்தில் 50 சதவீத கேள்விகள்

'நீட்' நுழைவு தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில், சம அளவுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வுக்கு தயாரானவர்களுக்கு, வினாக்கள் எளிதாக இருந்தன. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நடந்தது.
இதில், நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்துக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்ட பின், நடக்கும் முதல் தேர்வு என்பதால், மாணவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, பெரும்பாலான, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர். பிற மாவட்ட மாணவர்களில், பலர் தேர்வு கடினமாக இருந்ததாக 
கூறினர். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை புரிந்து படித்தும், பாடங்களை எழுதி பயிற்சி பெற்றவர்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது. திடீரென, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, எந்த பயிற்சியும் இல்லாதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. நேற்றைய வினாத்தாள், முந்தைய ஆண்டை விட எளிதாக இருந்த தாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

வினாத்தாள் குறித்து, போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும், 'டாப்பர்' நிறுவனத்தின் துணை தலைவர், ராஜசேகர் ராட்ரே கூறியதாவது: 'நீட்' தேர்வில், இயற்பியல், வேதியியலில் தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் இடம் பெற்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களிலிருந்து, சம அளவில் கேள்விகள் இடம் பெற்றன.பெரும்பாலான கேள்விகள், சிந்தித்து, புரிந்து பதில் எழுதும் வகையில் இருந்தன. வேதியியல் கொஞ்சம் கடினமாக இருந்தது. வேதியியலில், 87வது கேள்விக்கு, 'ஆர்' பிரிவு கேள்விக்கு வழங்கப்பட்ட விடை குறிப்புகளில், சரியான விடை இல்லை. இந்த ஆண்டு, 720 மதிப்பெண்களுக்கு, 180 கேள்விகள் இடம்பெற்றன. 380 முதல், 410 மதிப்பெண் வரை, 'கட் ஆப்' வர வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மனப்பாட கல்வியால்
கடினமான தேர்வு
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், 'சமச்சீர் பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து, தேர்வுக்கு வந்ததால், கடினமாக இருந்தது. கேள்விகள் குழப்பமாக இருந்தன. பாடங்களை முழுமையாக படித்திருந்தால், எளிமையாக இருந்திருக்கும். வேதியியல், இயற்பியல் பாடங்களிலிருந்து கடினமான கேள்விகள் இடம் பெற்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்ததால், தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறினோம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக